மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Friday, December 10, 2010

செட்டிநாடு - நகரத்தார்கள் கதையும் வாழ்வும்



நகரத்தார்கள் என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்
என்றும் அழைக்கப்படும் இவர்கள் இன்று உலகெங்கிலும்
வியாபித்து இருக்கிறார்கள். சோழ நாட்டின்
காவேரிபூம்பட்டினமே இவர்களது பூர்வீகம் ஆகும். ஒரு
காலத்தில் சோழர்கள் நகரத்தார் பெண்கள் மீது ஆசை கொண்டார்கள்.
இதனால் சோழர்களை வெறுத்து பாண்டிய மன்னர்களிடம்
நகரத்தார்கள்  தஞ்சம் அடைந்தார்கள்.ஒரு இடத்தில்
மற்றோர் இடத்திற்கு நகர்ந்து வந்ததால் "நகரத்தார்"
என்று பெயர் வந்ததாக சொல்வார்கள்.பாண்டிய மன்னர்கள்
கொடுத்த காரைக்குடியை சுற்றி உள்ளகிராமங்களில்
குடியேறினார்கள்.இப்பகுதியே "செட்டிநாடு" என்று
அழைக்கப்படுகிறது.இளையாத்தன்குடி
மாத்தூர் ,நேமம்,பிள்ளையார்பட்டி,இலுப்பைக்குடி
வேலங்குடி , இரணிகோயில்,வைரவன்கோயில் ,சூரக்குடி
 ஆகிய  இந்த 9 கிராமங்களிலும் 9 சிவன் கோயிலை
கட்டினார்கள்.இந்த 9 கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள்
 நகரத்தார்களுக்குள்ஏற்படுத்தப்பட்டன .இக்கோயிற்களுள் சிலவற்றில் 
உட்பிரிவுகள் உண்டுஒரே பிரிவில்  இருப்பவர்கள் பங்காளிகள் என்று
அழைக்கப்பட்டனர் . இவர்கள் ஒரே பிரிவுக்குள் திருமணம் செய்து
கொள்வதில்லை.

முன்பு இந்தகோயிலையும் சுற்றியுள்ள 96 கிராமங்களில் இவர்கள்
வசித்து வந்தனர். தற்போது இந்த கிராமங்கள் 74 ஆக குறைந்து விட்டன.
இந்த 74 கிராமங்களும் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய
மாவட்டகளில் பரவிஉள்ளது.
ஆரம்பகாலங்களில் வட்டி தொழிலை பிரதானமாக செய்து வந்த
இவர்கள் பின்னாளில் அனைத்து தொழில்களிலும் ஈடுபட
 துவங்கினார்கள்.இன்று சினிமா, கல்வி,விமான சேவை ,நிதி ,
நூற்பாலைகள், உரம் ,சிமெண்ட்பதிப்பகம் ,என்று அனைத்து
தொழிலிலும் கோலோச்சி கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஆரம்ப காலங்களில் பர்மா, மலேசிய ,சிங்கப்பூர்
ஆகிய நாடுகளில் தொழில் செய்து வந்தார்கள் .இதற்கு சான்று 
உலகம் முழுதும் இருக்கும் முருகன் கோயில்களே.
முருகன் மீது தீவிர ஈடுபாடுகொண்டவர்கள் நகரத்தார்கள் .
இவர்கள் வணிகத்தில் மட்டுமில்லாது ஆன்மிகத்திலும்
தங்கள் கொடியை உலகெங்கும் நாட்டிஉள்ளார்கள் .
ஆண்டு தோறும் விரதம் இருந்து பழனிக்கு காவடி எடுத்து 
செல்வார்கள்.இதில் சிறப்பு என்னவென்றால் மலையில் 
இருந்து திரும்பி வரும்போதும் காவடியை நடந்தே 
தூக்கி வருவார்கள்.

ஆயிரம் ஜன்னல் வீடு - காரைக்குடி 

கட்டிட கலைக்கு பெயர்பெற்றது  செட்டிநாட்டு கட்டிடங்கள் ஆகும்.
அந்த காலத்தில் கட்டப்பட்ட செட்டிநாட்டு வீடுகள் இன்று
பாரம்பரிய சின்னங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு வீடும்

அரண்மனை மாதிரி காட்சி அளிக்கும். வீட்டின் நீளம் ஒரு தெருவில்


செட்டிநாட்டு கட்டிட கலை
ஆரம்பித்து மறு தெருவில் தான் முடியும். தமிழ்நாடு அரசு
செட்டிநாட்டை சுற்றுலா தளமாக அறிவுத்துள்ளது. உலகெங்கிலுமிருந்து
ஏராளமான சுற்றுலா பயணிகள் செட்டிநாட்டு கட்டிட கலையை
பார்ப்பதற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

பல வெளிநாட்டு மாணவர்கள்
காரைக்குடியிலேயே தங்கி இவ்வீடுகளை பற்றி ஆராய்ச்சி செய்தும்
வருகிறார்கள். மழை நீர் சேகரிப்பை பற்றி நாம் இன்று தான் பேசி
கொண்டிருக்கிறோம்.ஆனால் நகரத்தார்கள் அன்றைய காலத்திலேயே
மழை நீரை சேகரிக்கும் வகையிலேயே வீடுகளை வடிவமைத்து
இருக்கிறார்கள். மழை நீரை சேகரித்து பயன்படுத்தியும்
வந்திருக்கிறார்கள்.செட்டிநாட்டு வீடுகளை சுற்றிப்பார்ப்பதற்க்கே
 ஒரு நாள் வேண்டும் .இன்றுள்ள ஆர்கிடெக்டுகளே ஆச்சர்யப்படும்
அளவிற்கு செட்டிநாட்டு கட்டிடக்கலை அமைந்துள்ளது.
காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் திருடன் ஒருவன்
வீட்டுகாரர்களுக்கு தெரியாமலேயே மூன்று
மாதம் வீட்டின் ஒரு பகுதியில் சமைத்து சாப்பிட்டு வந்தானாம்.
அப்படியென்றால் எவ்வளவு பெரிய வீடுகளாக இருக்கும் என்று 
எண்ணிப்பாருங்கள் .


செட்டிநாட்டு வீடுகள் சினிமா துறையினரையும் 
விட்டு வைக்கவில்லை. இந்த வீடுகளால் ஈர்க்கப்பட்டு நிறைய 
சினிமா படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகிறது . இது வரை 
தமிழ், மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட
நூற்றி இருபதிற்கும் மேற்ப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் இங்கு
நடந்துள்ளன. ஏராளமான விளம்பர படப்பிடிப்புகளும் நடந்துள்ளன.
இயக்குனர் ஹரியின் ஆஸ்தான படப்பிடிப்பு நகரமாக காரைக்குடி
விளங்குகிறது.
செட்டிநாட்டு வீடுகள் வெயிலுக்கும் மழைக்கும் ஏற்றவாறு
கட்டப்படிருக்கும். வீட்டினுள் எப்போதும் ஒரு குளுமை
இருக்கும். சுவர்களில் சிமிண்டுடன் முட்டை கலந்து பூசப்பட்டிருக்கும்.
இதனால் சுவர்கள் மிக வழவழப்பாக இருக்கும் . எனது நண்பர் ஒருவர் 
வீட்டில் எலெக்ட்ரிகல் வேலை மராமத்து பணி பார்ப்பதற்கே 
ஆறு லட்ச ரூபாய் செலவாகியதாம் . அப்படியென்றால் வீட்டின் 
மதிப்பை பார்த்து கொள்ளுங்கள்.இவர்கள் பெரும்பாலும் தங்கள் 
வீட்டின் பழமை மாறாமல் பார்த்து கொள்கிறார்கள் .செட்டிநாட்டு
திருமணங்கள் பெரும்பாலும் அவர்கள் வீட்டிலேயே தான்
நடைபெறும். கல்யாண மண்டபங்களில் திருமணம் நடப்பதை
கௌரவ விசயமாக நகரத்தார்கள் பார்க்கிறார்கள்.


செட்டிநாட்டு உணவுமுறைகள்
செட்டிநாட்டு உணவுமுறைகள் உலகப்புகழ் பெற்றது என்பது
அனைவரும் அறிந்த ஒன்றே. இன்று உலகின் எந்த பகுதிக்கு
சென்றாலும் காரைக்குடி செட்டிநாடு ரெஸ்டாரன்ட்களை
பார்க்க முடியும். அந்த அளவிற்கு செட்டிநாட்டு உணவு
வகைகள் புகழ்பெற்றவை.நகரத்தார்கள் பெரும்பாலும்
சிற்றுண்டியை பலகாரம் என்றே அழைப்பார்கள் .
யார் வீட்டுக்கு வந்தாலும் காலபலகாரம் (காலை சிற்றுண்டி)
ஆச்சா என்று கேட்பார்கள். அதே போல் மாலை 4 மணியளவில்
சாப்பிடுவதை இடைப்பலகாரம் என்று சொல்வார்கள் .
 இவர்களின் திருமணங்களில் சாப்பாடு விஷயம் என்பது
மிக முக்கியமான ஒன்று. திருமணங்களில் சைவ உணவே
பரிமாறப்படும். ஆனால்  பரிமாறப்படும் உணவு வகைகள்
கணக்கற்றவை .மதிய விருந்துக்கு தலைவாழை
 (முழு வாழைஇலை )இலை போட்டு 18 வகையான
காய்கறிகளுடன் விருந்து வைப்பார்கள் .அதே போல்
சிற்றுண்டியிலும் வகை வகையாக
வைத்து அசத்தி விடுவார்கள்.  கவுணி அரிசி, உக்காரை
வெள்ளை பணியாரம் , பால் பணியாரம்
இட்லி இல்லாமல் சிற்றுண்டி இருக்காது.
இன்றும் செட்டிநாட்டில் தயாரிக்கப்படும்
சீப்பு சீடை, தேன்குழல்,மணகோலம்,உருண்ட சீடை
அதிரசம் போன்ற வகைகள் உலகின் பல
நாட்டிற்கு ஏற்றுமதி ஆகிறது .

செட்டிநாட்டு திருமணங்கள்
நகரத்தார்களுக்கு  திருமணம் என்பது ஒரு திருவிழா மாதிரி.
 செட்டிநாட்டு திருமணத்தில்  ஏகப்பட்ட சடங்குகள் உள்ளன.
திருமணத்திற்கு முன்பு பெண்பார்த்தல்,பேசிமுடித்துக்கொடுத்தல்,
மூகூர்த்த கால் ஊண்டுதல் ,வீட்டுபடைப்பு போன்ற சடங்குகள் நடைபெறும் .திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பு,பெண் இடுக்கிகட்டுதல்,திருப்பூட்டுதல் ,மாமியார் சடங்கு , பூமணம் சொரிதல் ,மஞ்சள் நீராட்டுதல் ,சாமான் பரப்புதல் 
கும்பிட்டு கட்டிகொடுத்தல்,மணப்பெண் சொல்லி கொள்ளுதல் ,
பெண் அழைப்பு போன்ற சடங்குகள் நடைபெறும். மாப்பிள்ளைக்கு
கொடுக்கும் சீர்வரிசைகளை வீட்டின் ஒரு பகுதியில் திருமணத்திற்கு
வருவோர் பார்ப்பதற்காக மிக அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள்.
பெண் வீட்டார் மணமகனுக்கு கொடுக்கும் வரதட்சனையை ஒரு
நகை இரண்டு நகை என்றே கூறுவார்கள். இயக்குனர்
 கரு. பழனியப்பன் "பிரிவோம் சிந்திப்போம்" படத்தில்
செட்டிநாட்டு திருமணமுறைகளை அழகாக காட்டி இருப்பார்.


 மிக பிரபலமான  செட்டிநாட்டு ஆளுமைகள்
A .V . மெய்யப்ப செட்டியார் ( AVM நிறுவனர்)
கவியரசு கண்ணதாசன்
ராஜாசர் முத்தையா செட்டியார் (இந்தியன் வங்கி நிறுவனர்)
ராஜாசர் அண்ணாமலை செட்டியார்(சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக நிறுவனர்)
MAM .ராமசாமி செட்டியார்( செட்டிநாட்டு அரசர், )
RM .அழகப்பா செட்டியார் (அழகப்பா பல்கலைகழக நிறுவனர்)
.சிதம்பரம் (மத்திய உள்துறை அமைச்சர் )
AR .லக்ஷ்மணன் ( உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி)
AC .முத்தையா ( ஸ்பிக் அதிபர்,முன்னாள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தலைவர் ) 
தமிழ்வாணன் ( எழுத்தாளர் , மணிமேகலை பிரசுர நிறுவனர்)
வானதி திருநாவுக்கரசு ( வானதி பதிப்பக நிறுவனர்)
எஸ்..பி. அண்ணாமலை ( குமுதம் நிறுவனர்)
லேனா தமிழ்வாணன் ( எழுத்தாளர்)
வசந்த் ( திரைப்பட இயக்குனர்)
சோம.வள்ளியப்பன் ( நிதி ஆலோசகர் )
ராம. நாராயணன் (இயக்குனர் ,முன்னால் சட்டமன்ற உறுப்பினர்)
SP .முத்துராமன்  ( திரைப்பட இயக்குனர்)
பஞ்சுஅருணாசலம் (திரைப்பட தயாரிப்பாளர்)
கரு .பழனியப்பன் ( திரைப்பட இயக்குனர்)
சுப. வீரபாண்டியன் (எழுத்தாளர் ,SP . முத்துராமன் அவர்களின் சகோதரர்)
பழ.கருப்பையா (அரசியல்வாதி , நடிகர் )
அழ .வள்ளியப்பா (குழந்தை கவிஞர்)
தியாகராஜா செட்டியார் (நிறுவனர் தியாகராஜா கல்லூரி &மில்ஸ், மதுரை )
 .கே .செட்டியார் (சினிமா இயக்குனர்
M .தியாகராஜன் ( Paramount airways ,MD)
VN. சிதம்பரம்  (கமலா தியேட்டர் அதிபர் )
அபிராமி ராமநாதன் ( அபிராமி மெகா மால் அதிபர்)

இந்தியன் வங்கி ,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,பேங்க் ஆப் மதுரா போன்ற
வங்கிகள் காரைக்குடியில் ஆரம்பிக்க பட்ட வங்கிகள் ஆகும். இந்தியன்
வங்கியும் IOB யும்  தேசியமயமாக்க பட்டுவிட்டன. பேங்க் ஆப் மதுரா
வங்கியை ICICI வங்கி வாங்கி விட்டது.
இந்தப்பதிவில் ஏதேனும் தவறுகள் இருந்தால் தெரிவிக்கவும். தவறு
இருப்பின் மன்னிக்கவும்.


நன்றிகளுடன்
ஜி.ராஜ்மோகன்

 





























1 comment:

'பரிவை' சே.குமார் said...

நம் செட்டிநாட்டு சிறப்புக்களையும் செட்டியார் பெருமக்களையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.