மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
Tuesday, November 30, 2010

படித்ததில் பிடித்தது - கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்

ஆகஸ்ட் 15
அவன் ஒரு பட்டுவேட்டியை
பற்றிய கனாவிலிருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது !

சுதந்திரம்

மகாத்மா
நீ உன்னையே உருக்கி
இவர்களுக்கு
சுதந்திர மோதிரம்
செய்து கொடுத்தாய்
அணியும் போதுதான்
தெரிந்து கொண்டார்கள்
இவர்கள் விரல்களே இல்லாத
தொழுநோயாளிகள் என்று  !

Monday, November 29, 2010

மனநல மருத்துவர் ருத்ரன் - புத்தகங்கள்

மனநல மருத்துவர் ருத்ரன் அவர்கள்ஒரு நல்ல மனநல மருத்துவர்
 மட்டுமல்ல சிறந்த எழுத்தாளரும் கூட . உளவியலை தன்படைப்புகள் 
மூலம் வெகுஜன மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில்
 பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் . 
அவரின் புத்தகங்களைப்படித்தால் உளவியலைப்பற்றி சாமான்ய
மக்களும் புரிந்து கொள்ளலாம். உளவியலைப்பற்றி நாம் அனைவரும்
கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். உளவியலை படிப்பதன் மூலம்
 நாம் காலம் காலமாக ஊறி கிடக்கும் மூட நம்பிக்கைகளில் இருந்து வெளிவரமுடியும் .
டாக்டர் ருத்ரனின் "வாழ நினைத்தால் வாழலாம்"
"அதோ அந்த பறவை" , "மனநோய்கள் சிகிச்சை முறைகள்", " தேடாதே"
"உறவுகள்" போன்ற புத்தகங்களின் மூலம் நாம் அன்றாடம் பார்க்கும்
மனிதர்களின் உளவியல் பிரச்சனைகளை கதைகளைப்போல நாடகங்களை
போல அவர் விவரித்து இருப்பது படிப்பவர்கள் புரிந்து கொள்ள  
எளிதாக இருக்கிறது .அவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த மனநோயாளிகளின் பிரச்சனைகளை தன் எழுத்தின் மூலம் நமக்கு முன்வைக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அதற்கு தகுந்த சினிமா பாடல்களை சேர்த்திருக்கிறார் . அவரின் புத்தகங்களை படித்ததன்  மூலம் உளவியல் மீது எனக்கு அதீத ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது.அதன் பிறகு உளவியலைப்பற்றி இணையத்தில் தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன் . அப்படி நான் தெரிந்து கொண்ட சில 
உளவியல் வார்த்தைகள் உங்கள் பார்வைக்கு . 

edipus complex  - ஆண் குழந்தைக்கு தாயின் மேல் ஏற்படும் ஈர்ப்பு
electra complex - பெண் குழந்தைக்கு தந்தையின் மேல் ஏற்படும் ஈர்ப்பு.
schizophrenia  - மனச்சிதைவு பிறழ்வு நோய்
Bibiliomania - புத்தகங்கள் மீது கொள்ளும் அதீத ஈடுபாடு .
Trichotillomania - தலைமுடியை பியித்து கொள்ளும் மனநோய்.
frotteurism  -   பிற பாலினத்தை உரசி உரசி இன்பம் காண்பது
Transvestism - பிற  பாலினங்களின் உடைகளை அணிவதில் இன்பம் கொள்வது
Necrophilia  - பிணங்களோடு உறவு கொள்வது
Exhibitionism - தன் உறுப்புகளை பிற பாலினத்திற்கு காட்டி இன்பம் காண்பது
Kleptomania  - தொழில் முறை திருட்டு இல்லாமல் ,சும்மா ஜாலிக்காக  திருடி
இன்பம் காண்பது ( நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினியும் ,
நிறம் மாறாத பூக்கள் படத்தில் சுதாகரும் இந்த மாதிரி கேரக்டரில்
நடித்திருப்பார்கள்)
voyeurism  -  பிறர் உடலுறவு கொள்வதை பார்த்து இன்பம் காண்பது
Narrotophilia - பிறர் பாலினத்தை திட்டுவது மூலம் இன்பம் காண்பது
Bulimia - அதீதமாக பசிக்கும் வியாதி
Somnambulisam -தூக்கத்தில் நடக்கும் வியாதி
Insomnia - பசிக்காத வியாதி  
Telephone scatologia - தொலைபேசியில் உரையாடுவதால் ஏற்படும் இன்பம்
Partialism - உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இன்பம் காண்பது
Zoophilia  - விலங்குகளோடு உறவு கொள்வது
pedophilia  - குழந்தைகளோடு உறவு கொள்வது
Homeovestism -  தன்பால் உடைகளை அணிந்து இன்பம் காண்பது.
Gerentophilia   -  மூத்த வயதினரோடு உறவு கொள்வது
Lactophilia  - மார்பில் பால்குடிப்பதன் மூலம் இன்பம் காண்பது
Mechanophilia - கார் அல்லது மெஷின்களோடு உறவாடுவது
Olfactophilia - வாசனை பிடித்து இன்பம் காண்பது
Pictophilia - படங்களைபார்த்து இன்பம் காண்பது
Somnophilia - தூங்குபவர்களோடு உறவு கொண்டு இன்பம் காண்பது
Maieisophilia - கர்ப்பிணி பெண்களோடு உறவு கொள்வது .
மழை பெய்யும் போது அலைபேசியில் பேசாதீர்கள்அன்பார்ந்த பதிவன்பர்களே  தங்களின் மேலான கவனத்திற்கு .
மேல உள்ள தினசரி செய்தியை கவனிக்கவும் .
தயவு கூர்ந்து மழை பெய்யும் போது அலைபேசியில் பேசாதீர்கள். மின்னல் தாக்கி உயிரிழக்க கூட வாய்ப்புண்டு. அலைபேசியை
கவனமாக கையாளுங்கள் .நன்றி .

Thursday, November 25, 2010

பார்க்க வேண்டிய குறும்படம்


Thursday, November 18, 2010

படித்துப்பிடித்த பிடித்துப்படித்த புத்தகங்கள்

ஓவ்வொரு தனி மனிதன் வளர்ச்சிக்கும் ,வெற்றிக்கும் எப்படி  அவரது பெற்றோரும் ,ஆசிரியர்களும் 
எவ்வாறு உதவுகிறார்களோ அது போலவேதான் அவன் படிக்கும் 
புத்தகங்களும் உதவுகின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது . 
புத்தகங்கள் மனிதனை பண்படுத்துகிறது.அப்படி நான் படித்த சில நல்ல புத்தகங்களைப்பற்றிஇங்கே பகிர்ந்து கொள்ளப்போகிறேன் . என்னுடைய 
பதின் வயதில் எழுத்தாளர் பட்டுக்கோட்டைபிரபாகர் அவர்கள் எழுதிய
 புத்தகங்களை மட்டுமே படித்து வந்தேன் .அவ்வப்போது ராஜேஷ்குமார் 
நாவல்களையும் படிப்பதுண்டு .பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஏறக்குறைய அனைத்து  நாவல்களையும்  படித்திருப்பேன் என்றே நினைக்கிறன்.வெகுஜனஇதழ்களில் எழுதினால் அவை நல்லஇலக்கியமாக 
கருதப்படுவதில்லை.ஆனால் பி.கே.பி யின் சமூக நாவல்கள் தான் என்னுள் 
ஒரு பக்குவத்தை ஏற்படுத்தியது .குறிப்பாக  "தொட்டால் தொடரும்", " ஜன்னல் கைதிகள்", "கனவுகள் இலவசம்" ,"கொஞ்சம் காதல் வேண்டும்"
"எப்படியும் ஜெயிக்க வேண்டும்","கத்திக்கப்பல்" "சண்டிக்குதிரை" போன்ற நாவல்கள் என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்." கொஞ்சம் காதல் வேண்டும்" நாவலின் பாதிப்பை "முகவரி" திரைப்படத்தில் காணலாம். பி.கே. பியின் எழுத்தில் எப்போதும் ஒரு யதார்த்தம் இருக்கும். ஆனால் அவர் சமூக நாவல்களை காட்டிலும் கிரைம் நாவல்களில் தான்
அதிகம் பேசப்பட்டார். அவரது கதாபாத்திரங்கள் பரத் - சுசீலாவை யாராலும் மறக்கமுடியாது.இப்பொழுது அவர் அதிகம் எழுதுவதில்லை.

என்னுடைய இருபதாவது வயதில் தான் எனக்கு "எழுத்துசித்தர்" பாலகுமாரன் அவர்களின்  எழுத்து அறிமுகமானது.அதற்கு முன்பு பாலகுமாரனை படித்தால் பத்துப்பக்கங்களுக்கு மேல் படிக்க முடிந்ததில்லை.சில காலம் கழித்து அவரின் எழுத்துகள் எனக்கு பிடிபட ஆரம்பித்தன.பின்னர் வெறிகொண்டு அவரது எழுத்துகளை தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.அவரது எழுத்துக்கள் என்னுள் ஒரு புதிய மனிதனை உருவாக்கியது என்றே சொல்லலாம்.குறிப்பாக "இரும்புக்குதிரைகள்", "மெர்குரிப்பூக்கள்", "கரையோர முதலைகள்",  "நீ வருவாயென", "இனிது இனிது காதல்இனிது", "பயணிகள் கவனிக்கவும்", நெளி மோதிரம்"இன்னும் எத்தனையோ சொல்லக்கொண்டே போகலாம் .

அதன் பின்னர் கவிப்பேரரசு  வைரமுத்து அவர்களுடைய படைப்புக்களை வாசிக்க ஆரம்பித்தேன்.அவரது "தண்ணீர் தேசம்" கதையை ஒரே மூச்சில் வாசித்தேன். சத்தியமாக இந்த நூல் ஒரு விஞ்ஞான காவியம் தான். தமிழில் டைட்டானிக் கதையை எழுதி இருந்தால் எப்படி இருக்குமோ 
அப்படிப்பட்ட ஒரு படைப்பு அது. அவரது பிற படைப்புகள் "மீண்டும் என் தொட்டிலுக்கு","காவி நிறத்தில் ஒரு காதல்", " ஒரு போர்க்களமும் இரண்டு  பூக்களும்", "இதனால் சகலமானவர்களுக்கும்", "வடுகபட்டி முதல்
வால்காவரை"," சிற்பியே உன்னை செதுக்குகிறேன்", "கவிராஜன் கதை", "இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள்""இந்த பூக்கள் விற்பனைக்கல்ல", "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்", "பெய்யனபெய்யும் மழை", "ரத்த தானம்"
"கள்ளிகாட்டு இதிகாசம்", "கருவாச்சி காவியம்"' "பாற்கடல்" முதலிய படைப்புகள் மிக அற்புதமானவை.
அனைவரும் படிக்க வேண்டியவை.

அதன் பின்னர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின்  இணையத்தளம் மூலமும் "கதாவிலாசம்"
என்ற புத்தகத்தின்  மூலமும் நிறைய படைப்பாளிகளைப்பற்றி தெரிந்துகொண்டேன் . அப்படிப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளில்
நான் விரும்பிப்படித்த சில படைப்புகள் :

நெடுங்குருதி - எஸ். ராமகிருஷ்ணன்
யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
உபபாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்
உறுபசி -எஸ்.ராமகிருஷ்ணன்
அனல்காற்று - ஜெயமோகன்
ரப்பர் - ஜெயமோகன்
ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
கரைந்த நிழல்கள்- அசோகமித்திரன்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
காகித மலர்கள் -ஆதவன்
சூரிய வம்சம் - சா. கந்தசாமி
வாடாமல்லி - சு. சமுத்திரம்
பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு
தலைமுறைகள் -நீல. பத்மநாபன்
ஒற்றன் - அசோகமித்திரன்
கூகை -சோ .தர்மன்
கள்ளி -வாமு .கோமு
சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் - வாமு.கோமு
எரியும் பனிக்காடு - பி.ஹச்.deniyal
ஏறுவெயில் -பெருமாள் முருகன்
ரெண்டு - பா.ராகவன்
தூணிலும் இருப்பான் -பா. ராகவன்
நான்காவது எஸ்டேட் - கிருஷ்ணா டாவின்சி
மூன்று விரல் - இரா .முருகன்
அரசூர் வம்சம் -இரா.முருகன்
சத்திய சோதனை -இந்திரா பார்த்தசாரதி
தந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி
மானிடம் வெல்லும் - பிரபஞ்சன்
காதலெனும் ஏணியிலே - பிரபஞ்சன்
வானம் வசப்படும் -பிரபஞ்சன்
சோளகர் தொட்டி- பாலமுருகன்
சமுதாய வீதி- நா. பார்த்தசாரதி
துளசிமாடம் - நா. பார்த்தசாரதி
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
பாரிசுக்குப்போ - ஜெயகாந்தன்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்
பொய்த்தேவு - கா. நா .சுப்ரமணியம்
காதுகள் - எம்.வி. வெங்கட்ராம்
ரத்தம் ஒரே நிறம்- சுஜாதா
நைலான் கயிறு - சுஜாதா
சித்திரப்பாவை - அகிலன்
காலம் - வண்ணநிலவன்
இவை அனைத்தும் புதினங்கள் பட்டியல் மட்டுமே .
இது தவிர சிறுகதை தொகுப்புகள், கட்டுரை தொகுப்புகள்
பட்டியல் அடுத்த பதிவில் .
Tuesday, November 16, 2010

தமிழ் சினிமாவில் தொடக்க காலத்தில் திரைத்துறையினரின் பெயர்கள்

தில்லுமுல்லு படத்தில் ரஜினி தன் பெயரை சொல்லும்  போது  தன் ஊர் பெயரோடு சேர்த்து அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன் என்று சொல்லுவார் .அதுபோலதான் தமிழ் சினிமாவின் துவக்க காலத்தில் திரைக்கலைஞர்கள் தங்களது பெயர்களையும் ஊர்ப்பெயரோடு சேர்த்தே வைத்திருக்கிறார்கள் .அவ்வாறு பெயர் வைத்திருந்த திரைக்கலைஞர்களின்
பெயர்கள் ............

M .G .R -                          மருதூர் கோபாலமேனன் ராமசந்திரன்
V .C .கணேசன் -        விழுப்புரம் சின்னையா கணேசன்
M .K .T  -                         மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன்
C.N - அண்ணாதுரை -காஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை
N.T .ராமாராவ் -        நண்டமுறி தாரக ராமாராவ்
S.V. ரங்காராவ் -      சமரல வெங்கட ரங்காராவ்
S.S.வாசன் -              சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன்
L.V.பிரசாத் -            லக்ஷ்மி வரபிரசாத்ராவ்
A.V.M -                       ஆவிச்சி மெய்யப்ப செட்டியார்
P .U .சின்னப்பா -   புதுக்கோட்டை உலகநாதப்பிள்ளை சின்னப்பா
S .G .கிட்டப்பா -    செங்கோட்டை கங்காதரஅய்யர் கிட்டப்பா
T .S .பாலையா -    திருநெல்வேலி பாலையா
J .P .சந்திரபாபு -     ஜோசப் பனிமயதாஸ்  சந்திரபாபு
N .S .K -                      நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்
R.S.மனோகர் -       ராமசாமி சுப்பிரமணியம் மனோகர்
M.N.நம்பியார் -       மஞ்சேரி நாராயணன் நம்பியார்
M.S.விஸ்வநாதன்  -மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன்
K.V.மகாதேவன் - கிருஷ்ணன்கோவில் வெங்கடாசலம் மகாதேவன்
T.K.ராமமூர்த்தி - திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி
A.M.ராஜா -            எமலா மன்மதராஜூ ராஜா
S.P.பாலசுப்ரமணியம் - ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்பிரமணியம்
T .R.ராஜகுமாரி -      தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜகுமாரி
K .B..சுந்தராம்பாள் - கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
M.S.சுப்புலட்சுமி -     மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி
M.L.வசந்தகுமாரி -மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி
A.P.நாகராஜன் -     அக்கம்பேட்டை பரமசிவன் நாகராஜன்
S.S.ராஜேந்திரன் -     சேடபட்டி சூர்யநாராயணதேவர் ராஜேந்திரன்
T.R.சுந்தரம்-       திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம்
P.B.ஸ்ரீனிவாஸ் -     பிரதிவதி பயங்கார ஸ்ரீனிவாஸ்
L.R.ஈஸ்வரி -       லூர்துமேரி ராஜேஸ்வரி ஈஸ்வரி
T.M.சௌந்தராஜன் -     தொகுலவ மீனாட்சி ஐய்யங்கார் சௌந்தராஜன்
C.S.ஜெயராமன் -           சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன்
T.K.ராமமூர்த்தி .          திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி

ஜெமினி ஸ்டுடியோவில் வேலை பார்த்ததாலும் ஏற்கனவே கணேசன் என்ற பெயரில் நடிகர் இருந்ததாலும்"ஜெமினி கணேசன்" என்ற பெயரை அமரர் வாசன் அவர்கள் வைத்தார்.
"சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் " என்ற நாடகத்தைப்பார்த்த
தந்தை பெரியார் அவர்கள் கணேசன் என்ற பெயரை "சிவாஜி கணேசன்" என்று மாற்றினார்.


Monday, November 15, 2010

தத்துபித்து - கவிதை

என் காதலி !
உன் முகம்
நான் முகம் பார்க்கும்
கண்ணாடி !
உன் இரு கண்கள்
அனல்மின் நிலையங்கள்!
உன் இதழ்கள்
நான் தேனடுக்கும்
பூச்சாடி !
உன் கூந்தல்
என் விரல்கள்
நடை பயிலும்
பூந்தோட்டம் !
உன் கன்னங்கள்
என் இதழ்கள்
விளையாடும் மைதானம்!
உன் இடை
இறைவன் உனக்களித்த
கொடை!
உன் நடை
தோகை விரித்தாடும்
மயிலின் நடனம்!
உன் பேச்சு
இன்னிசை !
உன் சிரிப்பு
தீபாவளி மத்தாப்பு !

படித்ததில் பிடித்தது -

ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள்
சாமி குளத்தில்
நீராடினால்
தீர்க்காயுசாம்
நண்பன் சொன்னான்
குளத்தில் இறங்கினேன்
செத்து மிதந்தன
மீன்குஞ்சுகள் !

விற்கிறான்
தண்ணீர்ப்பொட்டலம்
குற்றால அருவிக்கரைகளில்!


போராளி
செத்தவனுக்காக
அழுபவன் நீ !
அழுதவர்களுக்காக
செத்தவன் அவன் !

Sunday, November 14, 2010

"மைனா" - யதார்த்த சினிமாவின் மற்றொரு மைல்கல்!


தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் மைனா திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு புதிய முயற்சி என்றே சொல்லலாம் . நூறு கோடி இருநூறு கோடி கொட்டி எடுக்கும் படங்களை விட இந்த மாதிரி சிறிய படங்கள் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியவை.மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து இல்லாமல் பிரமாண்ட செட்கள் இல்லாமல் வெளிநாட்டில் பாடல்கள் எடுக்காமல் தன்னுடைய கதை சொல்லும் திறமையை வைத்து மட்டும் களம் இறங்கியிருக்கும் இயக்குனர் பிரபு சாலமனுக்கு ஒரு ராயல் சல்யுட். இவருக்கு மைனா ஆறாவது படம். ஏற்கனவே இவர் இயக்கி இருந்த கண்ணோடு காண்பதெல்லாம் ,கிங் ,கொக்கி ,லீ, லாடம் முதலிய படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. மைனா படத்தின் கதை என்னவோ மிக இயல்பானதுதான் ஆனால் கதையை நகர்த்தியிருக்கும் விதம் மிக அருமை.படத்தின் நாயகன் சுருளி சிறுவயதில் இருந்து நாயகி மைனாவிற்கும் அவரது அம்மாவிற்கும் ஒரு பாட்டி வீட்டில் அடைக்கலம் தருகிறார்.மைனாவின் அம்மாவும் மருமகனே என்றே சுருளியை அழைக்கிறார். மைனாவை தினசரி பள்ளிகூடத்திற்கு சைக்கிள் மூலம் அழைத்து செல்வதே அவரது பிரதான வேலை.இந்த நிலையில் மைனா பூப்பைடைகிறார். சுருளிக்கும் மைனா மேல் காதல் பூக்கிறது.மைனாவின் அம்மாவோ வேறொரு இடத்தில் மாப்பிள்ளைப்பார்க்கிறார் . இது தெரிய வர சுருளி மைனாவின் அம்மா மேல் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ய முயல்கிறார். போலீஸ் அவரை கைது செய்து 15 நாள் காவலில் பெரியகுளம் கிளைச்சிறையில்அடைக்கிறார்கள். இதற்கிடையில் மைனாவின் அம்மா தீபாவளி அன்று மைனாவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.இது ஜெயிலில் இருக்கும் சுருளிக்கு தெரிய வர ஜெயிலில் இருந்து தப்பி விடுகிறார்.சுருளியை
தேடி இன்ஸ்பெக்டர் பாஸ்கரும் ,ராமையாவும் அவனது மலை கிராமமான செவ்வங்குடிக்கு செல்கின்றனர் . அங்கு மைனாவின் திருமணம் தடை படுகிறது,போலீசார் சுருளியை பிடித்துவிடுகின்றனர் . இவர்களோடு மைனாவும் வந்து விடுகிறார் .இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ,ராமையா ,சுருளி,மைனா நால்வரும் பெரியகுளம் நோக்கி பயணம் செய்கிறார்கள். இந்தப்பயணம் தான் படத்தின் மீதிக்கதை . அவர்கள் எப்படி பெரியகுளம் வந்து சேர்கிறார்கள் அதன்பின் என்ன நடக்கிறது என்பதில் தான் படமே இருக்கிறது .இந்த மாதிரி ஒரு படம் எடுப்பதற்கு முதலில் நிறைய துணிச்சல் வேண்டும் .அது இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கு நிறையவே இருக்கிறது. இந்தப்படத்தின் மிகப்பெரிய பலமே அதன் casting என்று சொல்லப்படுகின்ற பாத்திர அமைப்புகள் தான். ஹீரோ முதல் துணை நடிகர்கள் வரை
இயக்குனர் தேர்ந்து எடுத்திருக்கும் நடிகர்கள் தான் படத்தை தூக்கி நிறுத்திஇருக்கிறார்கள் . ஹீரோ விதார்த் சுருளி பாத்திரமாகவே மாறிவிட்டார். ஆனாலும் பருத்திவீரனின் பாதிப்பு நிறைவே தெரிகிறது.பரட்டை தலை ,மடிச்சு கட்டிய லுங்கி ,தாடியோடு பருத்திவீரன் கார்த்தியை நினைவு படுத்துகிறார் . மைனாவாக அமலா பால் கச்திதமாக பொருந்தி இருக்கிறார் . அவரது பெரிய விழிகள் தான் அவரது பிளஸ். கன்னத்தில் இருக்கும் சின்ன சின்ன பருக்கள் கூட அழகாக இருக்கின்றன .அவருக்கு படத்தில் வசனங்கள் மிகக்குறைவு.பார்வையாலேயே பேசுகிறார் .இன்ஸ்பெக்டர் பாஸ்கராக வரும் அறிமுகம் சேதுவிற்கு முதல் படம் போலவே தெரியவில்லை.படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவர் காட்டும் இறுக்கமான முகபாவம் ,உயிரை காப்பாற்றியதற்காக சுருளிக்கு நன்றி சொல்லும் இடம் நச். தம்பி ராமையா படத்தின் காமெடிக்கு உதவி செய்கிறார். படத்தின் இறுதியில் நல்ல குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மைனாவின் அம்மாவாக
வரும் பூவிதா,சுருளியின் அப்பாவாக வரும் பிணம்தின்னி,பாஸ்கரின் மனைவியாக வருபவர் , அந்த சிறுவன் மற்றும் பேருந்து பயணத்தில் வரும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மற்றும் சில சின்னச்சின்ன கேரக்டர்களும் படத்திற்கு உதவிஇருக்கிறார்கள். இந்த படத்தின் மற்றொரு கேரக்டராக வருவது அதன் லொக்கேசன். இதுவரை யாரும் படம்பிடிக்காத போடியை சுற்றியுள்ள மலைகிராமங்கள் குரங்கணி ,செவ்வன்குடி ,மூணாறு பகுதிகளின் பச்சை பசேல் என்ற காட்சிகளை திரையில் பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு இது முதல் படமாம் ,பட்டையை கிளப்பி இருக்கிறார். எந்த வித லைட்டிங்கும் இல்லாமல் இயற்கை வெளிச்சத்திலேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். இசை Dஇமான் பின்னணி இசையும் அனைத்துப்பாடல்களும் மிக அருமை குறிப்பாக 'மைனா மைனா', 'ஜிங்க்சிக்கா' 'கையப்புடி'பாடல்கள் சூப்பர். வைரபாலனின் கலை ,LVK .தாஸின் எடிட்டிங் படத்திற்கு பலம். இந்த மாதரியான படத்தை கொடுத்ததற்கு இயக்குனர் பிரபு சாலமனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சமீப காலத்தில் வந்த படங்களில் இந்த மாதிரி காட்சிக்கு காட்சி கைதட்டல்கள் வாங்கிய படம் இதுவாகத்தான் இருக்க முடியும். குறிப்பாக கடைசி காட்சியில் தியேட்டரே எழுந்து நின்று கை தட்டுகிறது."மைனா" கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தலை சிறந்த கிளாசிக் படங்கள் வரிசையில் இடம் பிடிப்பதில் சந்தேகம் இல்லை . மைனா கண்டிப்பாக உயரப்பறக்கும் .

Friday, November 12, 2010

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனோடு ஒரு கலந்துரையாடல்திருச்சியில் களம் இலக்கிய அமைப்பினர் சார்பில் 11 /11 /10 வியாழன் அன்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எஸ்.ரா அவர்கள் "கதைக்குள் வராதவர்கள்" என்ற தலைப்பில் சுமார் எண்பது நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். அருமையான உரை. கண்டிப்பாக நம் சம காலத்து எழுத்தாளர்களில் எஸ். ரா நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவர் என்பதில் ஐயமில்லை.நாம் இந்த வணிக உலகில் எவற்றைஎல்லாம் இழந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை ஒட்டியே அவரது உரை இருந்தது .அலாவுதீன் கில்ஜியைப்பற்றி ,மாலிக் கபூரைப்பற்றி ,ஹிட்லரைப்பற்றி,களப்பிரர்கள் காலம் பற்றி
நமக்குதெரியாதப்பல விசயங்களைப்பற்றி விரிவாகப்பேசினார் .இது போன்ற இலக்கிய கூட்டங்களுக்கு இன்னும் அதிகமான ஆதரவு தர வேண்டும் .அரசியல் பொதுகூட்டங்களுக்கு .நமது பிரிக்கப்படாத தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பற்றி எஸ். ரா பேசியதை இன்றைய அரசியல்வாதிகள் கேட்டிருக்க வேண்டும்.
அவர் பற்றி எஸ். சொன்ன சம்பவம் ஒன்று கேட்டால் இப்படியும் கூட ஒரு முதல்வர் தமிழ்நாட்டில் இருந்தாரா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.
ஒரு சமயம் ராமசாமி ரெட்டியார்.குற்றலாத்திற்கு காரில் டிரைவருடன் சென்றிருக்கிறார். திரும்பி வரும்பொழுது டிரைவர் டிக்கியில் ஒரு பலாப்பழத்தை தூக்கிப்போட்டு கொண்டு வந்துவிடுகிறார் .சென்னை வந்து சேர்ந்தவுடன் டிரைவர் அந்த பலாப்பழத்தை உரித்து தின்று கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த ராமசாமி ரெட்டியார் இந்த பலாப்பழம் உனக்கு எப்படி கிடைத்தது என்று
டிரைவரிடம் கேட்கிறார் அதற்கு டிரைவர் குற்றாலத்தில் அவர்கள் தங்கியிருந்த தோட்டத்தில் பறித்ததாக கூறுகிறார் . இதைக்கேட்ட முதல்வருக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்த பலாபழத்தின் விலை என்ன இருக்கும் என்று கேட்கிறார் அதற்கு டிரைவர் மூன்று ரூபாய் இருக்கும் என்கிறார் . முதல்வர் இந்த பழத்தை உடனே குற்றாலத்திற்கு எடுத்துச்சென்று அந்த தோட்டக்காரனிடமே கொடுத்து விட்டு வரும்படி கூறுகிறார். இதைக்கேட்ட டிரைவர் 'அய்யா ,இந்த பழத்தின் விலையே மூன்று ரூபாய் தான் ஆனால் இதை திருப்பிக்கொடுக்க போய் வர ஆறு ரூபாய் செலவு ஆகும் என்கிறான். அதற்கு முதல்வர் ,"அந்த தோட்டக்காரன் என்ன நினைப்பான் முதலமைச்சர் டிரைவரே இப்படி திருடுகிறானே அப்ப அந்த முதலமைச்சர் எவ்வளவு திருடுவான்னு நினைக்க மாட்டான "என்கிறார் .டிரைவருக்கு தன்னுடைய தவறு புரிகிறது .மேலும் முதல்வர் அந்த ஆறு ரூபாயை தான் தருவதாக சொல்கிறார் .டிரைவரும் பழத்தை குற்றாலத்தில் சேர்த்து விட்டு திரும்பி வருகிறான்.இப்போது முதல்வர் சொல்கிறார்,' அந்த தோட்டக்காரன் இப்ப என்னைப்பற்றி என்ன நினைப்பான் தெரியுமா ?வெறும் மூன்று ருபாய் பலாப்பழத்தைக்கூட இப்படி பாதுகாக்கிறாரே அப்ப இந்த நாட்டை எப்படி பாதுகாப்பார் அப்படின்னு நினைக்க மாட்டனா என்கிறார்.டிரைவரும் ஒப்புகொள்கிறார். மேலும் முதல்வர் அப்ப அந்த செலவு ஆறு ரூபாயை யார் தருவது என்று கேட்கிறார் அதற்கு டிரைவர் என்ன அய்யா நீங்க தானே தரேன்னு சொன்னிங்க என்று கூற "ஏன்யா நீ செஞ்ச தப்புக்கு நான் கொடுக்கணும் அதனால இந்த மாசத்தில் இருந்து மாசம் ஒரு ரூபாயை உன்னுடைய சம்பளத்திலிருந்து கொடுத்து விடு"என்கிறார். இப்படிப்பட்ட முதலமைச்சர் எல்லாம் கூட தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வியப்பாக உள்ளது .இந்த சம்பவத்தை பார்க்கும் போது
இப்போதுள்ள முதல்வர்களைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இது போன்ற பல விசயங்களைப்பற்றி எஸ். ரா அவர்கள் பேசினார். கூட்டத்தினர் யாரும் கூட்டம் முடியும் வரை நகலவில்லை. இதைப்போல இலக்கிய கூட்டங்கள் ஊர்தோறும் நடக்க வேண்டும். இதை சிறப்புற செய்த களம் அமைப்பை சேர்ந்த அனைவருக்கும் நன்றிகள் .