மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Thursday, January 20, 2011

படித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் " சாகாவரம்" நாவல்

நான் படித்த மற்றும் படித்து கொண்டிருக்கும் பல்வேறு
புத்தகங்களை பற்றி கொஞ்சம் எழுதினால் மற்றவர்களுக்கும் அது உபயோகமாக இருக்கும் என்பதால் இனி உங்கள் வாசிப்பிற்காக .

படித்ததில் பிடித்தது ......... :"சாகாவரம்" நாவல் - வெ.இறையன்பு

 பல்வேறு தலைப்பில் கட்டுரை  தொகுப்புகள்  எழுதி வந்த வெ.இறையன்பு
 I .A .S அவர்களின் இரண்டாவது நாவல்" சாகாவரம்" .
இவரது முதல் நாவல் " ஆத்தங்கரை ஓரம்" என்ற நாவலாகும்.
சாகாவரம் நாவல் மூலம் தன்னை ஒரு தேர்ந்த படைப்பாளி என்று
மீண்டும் நிரூபித்து இருக்கிறார் இறையன்பு.

 நாவலை படிக்க படிக்க புத்தகத்தை கீழே வைக்க
முடியாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன் .இந்த நாவல்
மரணத்தை பற்றிய ஒரு தேடலாகும்.நாவல் மரணம் ,
பயணம் ,சலனம் என்ற மூன்று பகுதிகளை கொண்டது.
கதையின் நாயகன் நசிகேதன் ஒரு பள்ளி ஆசிரியர்.
முப்பத்தைந்து வயதாகியும் திருமணமே வேண்டாம் என்று
பிரம்மச்சாரியாக வாழ்ந்து வருபவன். வாழ்வில் மிகப்பெரிய
தேடல்கள் எதுவும் இல்லாமல் தன் பணியை மட்டும்
நேசித்து செய்து வருபவன் .

நசிகேதனுடைய நெருங்கிய நண்பர்கள் நான்கு பேர் ஒவ்வொருவராக
 அடுத்தடுத்து மரணமடைகிறார்கள். இந்த மரணங்கள் தந்த பாதிப்பால்
நசிகேதன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.பள்ளியிலும் சரிவர
பாடம் நடத்த முடியாமல் கஷ்டபடுகிறான்.மாணவர்கள் தலைமை
ஆசிரியரிடம் இவனைப்பற்றி புகார் தெரிவிக்கிறார்கள்.

அவனுக்கு மரணத்தை பற்றிய ஒரு பயம் உருவாகிறது .இதனால்
வேலையை விட்டு விட்டு மரணத்தை பற்றி தெரிந்து கொள்ள தன்
பயணத்தை துவக்குகிறான். வழியில் பிரக்ஞ்சா என்ற சாமியாரை
சந்திக்கிறான். அவர் இவன் தேடலுக்கு விடை கொல்லிமலையில்
உள்ள ஞானி ஒருவரிடம் இருக்கிறது அவரை போய் சந்திக்குமாறு
கூறுகிறார். நசிகேதனும் கொல்லிமலை நோக்கி பயணிக்கிறான்.
அந்த ஞானியையும் சந்தித்து விடுகிறான்.

 அவருடனே சேர்ந்து கொல்லிமலையில் தங்குகிறான்.
தனக்கு மரணமில்லா பெருவாழ்வு வேண்டும் என்கிறான் .
அந்த ஞானி இவனுக்கு பல விசயங்களை
கற்றுத்தருகிறார். ஒரு மூட்டை நிறைய பழைய
ஓலைச்சுவடிகளை தந்து " நீ தேடி வந்த கேள்விக்கு பதில் இந்த
ஓலைச்சுவடிகளில் உள்ளது படித்து தெரிந்து கொள்"என்று கூறுகிறார்.

அவனும் அந்த ஓலைச்சுவடிகளை பொறுமையாக படித்து மரணத்தை
பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்கிறான். தீடிரென்று
அந்த ஞானியும் ஒரு இரவில் மரணமடைந்து விடுகிறார்.
அங்கிருக்கும் காட்டுவாசிகளுடன்  சேர்ந்து ஞானியின்
இறுதி கடமையை முடித்துவிட்டு அந்த ஓலைச்சுவடிகளில்
குறிப்பிட்டுள்ள குறுப்புகளின்படி மரணமே நிகழாத " சிரஞ்சீவி வெளி"
என்ற தீவை நோக்கி பயணம் மேற்கொள்கிறான்.

முடிவில் சிரஞ்சீவி வெளியை ஒரு வழியாக கண்டுபிடித்து அங்கு
செல்கிறான் . அந்த தீவிற்கு உள்ளே சென்றவர்கள் திரும்பி
வர இயலாது .அந்த தீவில் இவனை போல நிறைய பேர்
இருக்கிறார்கள்  தீவிலிருக்கும் ஒவ்வொருவரின் கதையை
கேட்கும்  போது தான் அவனுக்கு  தெரிகிறது தான் ஒரு
தப்பான இடத்திற்கு வந்துவிட்டோம் என்று .
அந்த தீவில் எல்லாமே நேர்மாறாக இருக்கிறது.

ஒரே மாதிரி காற்று
ஒரே மாதிரி வெளிச்சம்
ஒரே மாதிரி தட்பவெப்பம்
ஒன்று போல பழங்கள்
நிர்வாண ஆட்கள்
பாடாத பறவைகள்

இப்படி எல்லாமே ஒரே மாதிரி சுவாரசியம் இல்லாமல்
இருக்கிறது.  அவன் நினைவு பின்னோக்கி அழைத்து
செல்கிறது . அப்பொழுது தான் அவன் புரிந்து கொள்கிறான் .
நிரந்தரமானவை எதுவும் அழகு கிடையாது,மாற்றங்கள்
மட்டுமே அழகு என்று.மேலும்  மரணம் மட்டுமே உண்மையானது
என்று அந்த தீவு அவனுக்கு உணர்த்துகிறது  என்று நாவல் முடிகிறது.

இந்த நாவல் ஒரு ஆத்ம விசாரணையை நம்முள்
ஏற்படுத்துகிறது. இந்த நாவல் கண்டிப்பாக உங்களையும்
பாதிக்கும் என்று நம்புகிறேன் .படித்து பாருங்கள் .

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை : ரூ 110 /-
பக்கங்கள் -224

என்றும் நன்றிகளுடன் ,
ஜி .ராஜ்மோகன்





















Wednesday, January 12, 2011

படித்ததில் பிடித்தது - வண்ணநிலவனின் "காலம்" புதினம்

படித்ததில் பிடித்தது - வண்ணநிலவனின் "காலம்" புதினம்.

வண்ணநிலவன் அவர்கள் எழுதிய "காலம்" புதினம் மிக அருமையான
புதினமாகும். வண்ணநிலவன் அவர்கள் சில காலம் திருநெல்வேலியில்
ஒரு வக்கீலிடம் பணிபுரிந்திருக்கிறார். அப்போது அவர் அவதானித்த
சில விஷயங்களை வைத்து காலம் புதினத்தை அவர் எழுதியிருக்கிறார்.
 நாவல்,படிப்பவர்களை அவர்கள் கைபிடித்து கூட்டிச்செல்லும் மிக
எளிமையான நடையில் உள்ளது.

 இந்தக்கதையின் நாயகன் நெல்லையப்பன் இருபது வயதுகளின் 
 மத்தியில் இருப்பவன். ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக சொற்ப ,
சம்பளத்திற்கு வேலைப்பார்க்கிறான். அவனது அப்பா
ஒரு மளிகைக்கடையில் வேலைப்பார்க்கிறார். கல்யாணமான
அவனது அக்காவும் மச்சானும் இவனது வீட்டிலேயே
தங்கி இருக்கிறார்கள்.

நெல்லையப்பனுக்கு கோர்ட்டும்
வீடும் மட்டுமே உலகம். அது தவிர சினிமா பார்ப்பதும்
இலக்கியம் படிப்பதும் அவனுக்கு பொழுதுபோக்கு.
இவனது எதிர் வீட்டிலிருக்கும் இவன் அக்கா வயதுள்ள 
காந்திமதி இவனிடம் தோழி மாதிரி பழகுகிறாள் .
அவனுக்கும் அவளை ரொம்பப்பிடிக்கும் . நெல்லையப்பனை
போல காந்திமதிக்கும் இலக்கியத்தில் ஆர்வமுண்டு
.தாங்கள் படித்ததை இருவரும் பகிர்ந்து கொள்வதுண்டு .
காந்திமதி சங்கரன் என்பவனை காதலிக்கிறாள். நெல்லையப்பனும் 
சங்கரனை மச்சான் என்றே அழைக்கிறான் . 
நெல்லையப்பனுடன் வேலை பார்க்கும் பெரிய குமாஸ்தா சிதம்பரம்பிள்ளைக்கு தன் மகளை நெல்லையப்பனுக்கு 
கல்யாணம் பண்ணி கொடுக்க ஆசை . நெல்லையப்பன்
அப்பாவிற்க்கோ சொத்து வைத்திருக்கும் தன்தங்கை மகளான
 மீனாச்சிக்கு கட்டிக்கொடுக்க ஆசை.
நெல்லையப்பனுக்கோ சென்னை சென்று இன்னும்
 நிறைய சம்பளம் கிடைக்கும் வேலையில்
சேர வேண்டும் என்று ஆசை.

இந்நிலையில் நெல்லையப்பனுக்கு காந்திமதி மீது
உள்ளூர ஒரு இனக்கவர்ச்சி ஏற்படுகிறது.
நெல்லையப்பனின் அப்பாவோ தன் தங்கை மகளுக்கு
நெல்லையப்பனை பேசி முடித்துவிடுகிறார் .நெல்லையப்பனும் 
வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு ஒத்து கொள்கிறான் 
என்று கதை முடிகிறது . 

கதையின் வாயிலாக வண்ணநிலவன்  திருநெல்வேலியை
நம் கண்முன்னே நடமாட விடுகிறார். கோர்ட் காட்சிகளை
அவர் எழுதியிருக்கும் விதம் படிக்கும் போது ஏதோ
சினிமாவை பார்ப்பது போல் இருக்கிறது.
இருபது வயதுகளில் இருக்கும் இளைஞர்களின்
மனஓட்டத்தை, தடுமாற்றத்தை தன் எழுத்தின் வழியே
அப்படியே பதிவு செய்திருக்கிறார். வண்ணநிலவனின்
சிறப்பு அவர் காட்சிகளை விவரிக்கும் விதமாகும்.
பீர்பாத் ஹோட்டல் ,  கோர்ட் காண்டீன், தாமிரபரணி ஆறு
போன்றவை அவரது கதையின் கதாபாத்திரங்களாகவே
மாறிவிடுகின்றன .

அனைவரும் படிக்க வேண்டிய புதினம் இது .
ஆனந்த விகடன் பதிப்பாகவும் ,கிழக்கு பதிப்பாகவும்
 இது வெளிவந்திருக்கிறது.

 என்றும் நன்றிகளுடன்,

ஜி.ராஜ்மோகன்