மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Thursday, January 20, 2011

படித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் " சாகாவரம்" நாவல்

நான் படித்த மற்றும் படித்து கொண்டிருக்கும் பல்வேறு
புத்தகங்களை பற்றி கொஞ்சம் எழுதினால் மற்றவர்களுக்கும் அது உபயோகமாக இருக்கும் என்பதால் இனி உங்கள் வாசிப்பிற்காக .

படித்ததில் பிடித்தது ......... :"சாகாவரம்" நாவல் - வெ.இறையன்பு

 பல்வேறு தலைப்பில் கட்டுரை  தொகுப்புகள்  எழுதி வந்த வெ.இறையன்பு
 I .A .S அவர்களின் இரண்டாவது நாவல்" சாகாவரம்" .
இவரது முதல் நாவல் " ஆத்தங்கரை ஓரம்" என்ற நாவலாகும்.
சாகாவரம் நாவல் மூலம் தன்னை ஒரு தேர்ந்த படைப்பாளி என்று
மீண்டும் நிரூபித்து இருக்கிறார் இறையன்பு.

 நாவலை படிக்க படிக்க புத்தகத்தை கீழே வைக்க
முடியாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன் .இந்த நாவல்
மரணத்தை பற்றிய ஒரு தேடலாகும்.நாவல் மரணம் ,
பயணம் ,சலனம் என்ற மூன்று பகுதிகளை கொண்டது.
கதையின் நாயகன் நசிகேதன் ஒரு பள்ளி ஆசிரியர்.
முப்பத்தைந்து வயதாகியும் திருமணமே வேண்டாம் என்று
பிரம்மச்சாரியாக வாழ்ந்து வருபவன். வாழ்வில் மிகப்பெரிய
தேடல்கள் எதுவும் இல்லாமல் தன் பணியை மட்டும்
நேசித்து செய்து வருபவன் .

நசிகேதனுடைய நெருங்கிய நண்பர்கள் நான்கு பேர் ஒவ்வொருவராக
 அடுத்தடுத்து மரணமடைகிறார்கள். இந்த மரணங்கள் தந்த பாதிப்பால்
நசிகேதன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.பள்ளியிலும் சரிவர
பாடம் நடத்த முடியாமல் கஷ்டபடுகிறான்.மாணவர்கள் தலைமை
ஆசிரியரிடம் இவனைப்பற்றி புகார் தெரிவிக்கிறார்கள்.

அவனுக்கு மரணத்தை பற்றிய ஒரு பயம் உருவாகிறது .இதனால்
வேலையை விட்டு விட்டு மரணத்தை பற்றி தெரிந்து கொள்ள தன்
பயணத்தை துவக்குகிறான். வழியில் பிரக்ஞ்சா என்ற சாமியாரை
சந்திக்கிறான். அவர் இவன் தேடலுக்கு விடை கொல்லிமலையில்
உள்ள ஞானி ஒருவரிடம் இருக்கிறது அவரை போய் சந்திக்குமாறு
கூறுகிறார். நசிகேதனும் கொல்லிமலை நோக்கி பயணிக்கிறான்.
அந்த ஞானியையும் சந்தித்து விடுகிறான்.

 அவருடனே சேர்ந்து கொல்லிமலையில் தங்குகிறான்.
தனக்கு மரணமில்லா பெருவாழ்வு வேண்டும் என்கிறான் .
அந்த ஞானி இவனுக்கு பல விசயங்களை
கற்றுத்தருகிறார். ஒரு மூட்டை நிறைய பழைய
ஓலைச்சுவடிகளை தந்து " நீ தேடி வந்த கேள்விக்கு பதில் இந்த
ஓலைச்சுவடிகளில் உள்ளது படித்து தெரிந்து கொள்"என்று கூறுகிறார்.

அவனும் அந்த ஓலைச்சுவடிகளை பொறுமையாக படித்து மரணத்தை
பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்கிறான். தீடிரென்று
அந்த ஞானியும் ஒரு இரவில் மரணமடைந்து விடுகிறார்.
அங்கிருக்கும் காட்டுவாசிகளுடன்  சேர்ந்து ஞானியின்
இறுதி கடமையை முடித்துவிட்டு அந்த ஓலைச்சுவடிகளில்
குறிப்பிட்டுள்ள குறுப்புகளின்படி மரணமே நிகழாத " சிரஞ்சீவி வெளி"
என்ற தீவை நோக்கி பயணம் மேற்கொள்கிறான்.

முடிவில் சிரஞ்சீவி வெளியை ஒரு வழியாக கண்டுபிடித்து அங்கு
செல்கிறான் . அந்த தீவிற்கு உள்ளே சென்றவர்கள் திரும்பி
வர இயலாது .அந்த தீவில் இவனை போல நிறைய பேர்
இருக்கிறார்கள்  தீவிலிருக்கும் ஒவ்வொருவரின் கதையை
கேட்கும்  போது தான் அவனுக்கு  தெரிகிறது தான் ஒரு
தப்பான இடத்திற்கு வந்துவிட்டோம் என்று .
அந்த தீவில் எல்லாமே நேர்மாறாக இருக்கிறது.

ஒரே மாதிரி காற்று
ஒரே மாதிரி வெளிச்சம்
ஒரே மாதிரி தட்பவெப்பம்
ஒன்று போல பழங்கள்
நிர்வாண ஆட்கள்
பாடாத பறவைகள்

இப்படி எல்லாமே ஒரே மாதிரி சுவாரசியம் இல்லாமல்
இருக்கிறது.  அவன் நினைவு பின்னோக்கி அழைத்து
செல்கிறது . அப்பொழுது தான் அவன் புரிந்து கொள்கிறான் .
நிரந்தரமானவை எதுவும் அழகு கிடையாது,மாற்றங்கள்
மட்டுமே அழகு என்று.மேலும்  மரணம் மட்டுமே உண்மையானது
என்று அந்த தீவு அவனுக்கு உணர்த்துகிறது  என்று நாவல் முடிகிறது.

இந்த நாவல் ஒரு ஆத்ம விசாரணையை நம்முள்
ஏற்படுத்துகிறது. இந்த நாவல் கண்டிப்பாக உங்களையும்
பாதிக்கும் என்று நம்புகிறேன் .படித்து பாருங்கள் .

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை : ரூ 110 /-
பக்கங்கள் -224

என்றும் நன்றிகளுடன் ,
ஜி .ராஜ்மோகன்





















Wednesday, January 12, 2011

படித்ததில் பிடித்தது - வண்ணநிலவனின் "காலம்" புதினம்

படித்ததில் பிடித்தது - வண்ணநிலவனின் "காலம்" புதினம்.

வண்ணநிலவன் அவர்கள் எழுதிய "காலம்" புதினம் மிக அருமையான
புதினமாகும். வண்ணநிலவன் அவர்கள் சில காலம் திருநெல்வேலியில்
ஒரு வக்கீலிடம் பணிபுரிந்திருக்கிறார். அப்போது அவர் அவதானித்த
சில விஷயங்களை வைத்து காலம் புதினத்தை அவர் எழுதியிருக்கிறார்.
 நாவல்,படிப்பவர்களை அவர்கள் கைபிடித்து கூட்டிச்செல்லும் மிக
எளிமையான நடையில் உள்ளது.

 இந்தக்கதையின் நாயகன் நெல்லையப்பன் இருபது வயதுகளின் 
 மத்தியில் இருப்பவன். ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக சொற்ப ,
சம்பளத்திற்கு வேலைப்பார்க்கிறான். அவனது அப்பா
ஒரு மளிகைக்கடையில் வேலைப்பார்க்கிறார். கல்யாணமான
அவனது அக்காவும் மச்சானும் இவனது வீட்டிலேயே
தங்கி இருக்கிறார்கள்.

நெல்லையப்பனுக்கு கோர்ட்டும்
வீடும் மட்டுமே உலகம். அது தவிர சினிமா பார்ப்பதும்
இலக்கியம் படிப்பதும் அவனுக்கு பொழுதுபோக்கு.
இவனது எதிர் வீட்டிலிருக்கும் இவன் அக்கா வயதுள்ள 
காந்திமதி இவனிடம் தோழி மாதிரி பழகுகிறாள் .
அவனுக்கும் அவளை ரொம்பப்பிடிக்கும் . நெல்லையப்பனை
போல காந்திமதிக்கும் இலக்கியத்தில் ஆர்வமுண்டு
.தாங்கள் படித்ததை இருவரும் பகிர்ந்து கொள்வதுண்டு .
காந்திமதி சங்கரன் என்பவனை காதலிக்கிறாள். நெல்லையப்பனும் 
சங்கரனை மச்சான் என்றே அழைக்கிறான் . 
நெல்லையப்பனுடன் வேலை பார்க்கும் பெரிய குமாஸ்தா சிதம்பரம்பிள்ளைக்கு தன் மகளை நெல்லையப்பனுக்கு 
கல்யாணம் பண்ணி கொடுக்க ஆசை . நெல்லையப்பன்
அப்பாவிற்க்கோ சொத்து வைத்திருக்கும் தன்தங்கை மகளான
 மீனாச்சிக்கு கட்டிக்கொடுக்க ஆசை.
நெல்லையப்பனுக்கோ சென்னை சென்று இன்னும்
 நிறைய சம்பளம் கிடைக்கும் வேலையில்
சேர வேண்டும் என்று ஆசை.

இந்நிலையில் நெல்லையப்பனுக்கு காந்திமதி மீது
உள்ளூர ஒரு இனக்கவர்ச்சி ஏற்படுகிறது.
நெல்லையப்பனின் அப்பாவோ தன் தங்கை மகளுக்கு
நெல்லையப்பனை பேசி முடித்துவிடுகிறார் .நெல்லையப்பனும் 
வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு ஒத்து கொள்கிறான் 
என்று கதை முடிகிறது . 

கதையின் வாயிலாக வண்ணநிலவன்  திருநெல்வேலியை
நம் கண்முன்னே நடமாட விடுகிறார். கோர்ட் காட்சிகளை
அவர் எழுதியிருக்கும் விதம் படிக்கும் போது ஏதோ
சினிமாவை பார்ப்பது போல் இருக்கிறது.
இருபது வயதுகளில் இருக்கும் இளைஞர்களின்
மனஓட்டத்தை, தடுமாற்றத்தை தன் எழுத்தின் வழியே
அப்படியே பதிவு செய்திருக்கிறார். வண்ணநிலவனின்
சிறப்பு அவர் காட்சிகளை விவரிக்கும் விதமாகும்.
பீர்பாத் ஹோட்டல் ,  கோர்ட் காண்டீன், தாமிரபரணி ஆறு
போன்றவை அவரது கதையின் கதாபாத்திரங்களாகவே
மாறிவிடுகின்றன .

அனைவரும் படிக்க வேண்டிய புதினம் இது .
ஆனந்த விகடன் பதிப்பாகவும் ,கிழக்கு பதிப்பாகவும்
 இது வெளிவந்திருக்கிறது.

 என்றும் நன்றிகளுடன்,

ஜி.ராஜ்மோகன்

Wednesday, December 15, 2010

படித்ததில் பிடித்தது- கவிப்பேரரசு வைரமுத்துவின் "பாற்கடல்" - கேள்வி-பதில் தொகுப்பு புத்தகம்

குமுதம் வார இதழில் வெளிவந்த கவிப்பேரரசு வைரமுத்து
அவர்களின் கேள்வி -பதில்களின் தொகுப்பே இந்த "பாற்கடல்"
புத்தகம். நம்மில் பலபேர் குமுதம் இதழில் இதை
வாசித்திருக்க கூடும். ஆனாலும் புத்தக வடிவில் மீள்வாசிப்பு
செய்யும் போது இன்னும் ஆழ்ந்து படிக்க முடிகிறது. .மொத்தம் 378 வாசகர்
கேள்விகளுக்கு வைரமுத்து அவர்கள் அளித்துள்ள பதில்கள்
இந்தபுத்தகத்தில் உள்ளன.   பதில்கள் ஒவ்வொன்றும் அருமை.
 சினிமா ,கலை, இலக்கியம், பொதுஅறிவு, வரலாறு, அரசியல்,
கவிதை,மொழியியல்,அறிவியல்  என்று பலதரப்பட்ட கேள்விகளுக்கு
அவர் அளித்திருக்கும் பதில் சிந்தனையை தூண்டக்கூடியவை.
இது ஒரு கேள்வி- பதில் தொகுப்பாக மட்டுமல்லாமல்
ஒரு கலைகளஞ்சியமாகவே இருக்கிறது. விளக்குமாறு
செய்வது எப்படி? என்ற கேள்வி முதல் எரிமலைகள் ஏன்
வெடிக்கின்றன? என்ற கேள்வி வரை அவரது பதில்கள்
மிக சுவாரஸ்யமாகவும் பல தகவல்களை நமக்கு தரும்
விதமாகவும் அமைந்துள்ளது.கண்டிப்பாக நாம்
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமிது.

வைரமுத்து அவர்களின் முன்னுரையில் இருந்து சில
வரிகள் :
கேள்விகள் சாவிகள்; பூமியின் புதிர்களை வாழ்வின்
ரகசியங்களை அவை திறக்கின்றன.
கேட்கப்பட்ட கேள்விகளால் தன்னைதிறந்து கொண்ட
பிரபஞ்சம் கேட்கப்படாத கேள்விகளுக்காக ஆயிரம் கோடி
ஆண்டுகளாய் அகலிகைக்கல்லாய்க் கிடக்கிறது அப்படியே.
ஆதியில் கேள்வியில்லை; அச்சமே இருந்தது; பசியே
இருந்தது; ஓட்டமும் தப்பிதலுமே இருந்தது;
ஏன் அச்சப்படுகிறோம் என்பதுதான் மனிதகுலத்தின்
முதல் கேள்வி என்கிறது மானுடவியல் .
ஒரு காலத்தில் வழியும் ரத்தம் உறையாமலே வழிவழியாக
இறந்து கொண்டிருந்தார்கள் எகிப்திய அரசர்கள் .
ஏன் இந்த மரண சம்பவம் என்ற கேள்விக்கான விடையில்
உறவுமுறைகளே மாறின .அதுவரைக்கும் எகிப்திய அரசர்கள் தங்கள் சகோதரிகளையும் எகிப்திய அரசிகள் தங்கள் சகோதரரர்களையுமே மணந்து
வந்தார்கள். எகிப்திய அழகி கிளியோபாட்ராவின் முதல் கணவன்
ராமேஷாய் என்பவன் அவள் உடன் பிறந்த அண்ணன்.
ரத்தசம்பந்தமுள்ள தாம்பத்திய உறவுகளின் காரணமாகத்தான்
உடற்கேடுகள் உண்டாகின்றன என்று கண்டறியப்பட்ட போது
சகோதர திருமணங்கள் முடிவுக்கு வந்தன.

இப்புத்தகத்தில் நான் படித்து ரசித்த சில கேள்வி பதில்கள்.

கேள்வி : கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள்?
பதில்:       மேக்- அப்பை கலைத்து விட்டு வாருங்கள்
                  டீ சாப்பிட்டு விட்டு வரலாம் என்பேன்.

கேள்வி:  துபாய் தமிழ்ச்சங்கத்தில் பேசும் போது நன்கு பந்துகளை
                 சொல்லி வாழ்க்கை தத்துவம் சொன்னீர்களே அது பற்றி?
பதில் :   " ஒவ்வொரு மனிதனும் நான்கு வகை பந்துகளோடு
                 பயணமாகிறான் .
                 வலக்கரத்தில் ஒரு பந்து ;இடக்கரத்தில் ஒரு பந்து
                 வலகக்கத்தில் ஒரு பந்து;  இடக்கக்கத்தில் ஒரு பந்து ;
                 ஒரு பந்துக்கு பெயர் தொழில் ;இன்னொரு பந்துக்கு பெயர்
                 குடும்பம் ;வேறொரு பந்துக்கு பெயர் நட்பு;
                 மற்றொரு பந்துக்கு பெயர் உடல்நலம் ;
                 இந்த நான்கு பந்துகளும் விழுந்து விடாமல் கடைசி வரை
                 கரை சேர்பவனே கடமை வீரன் .
                 நான்கு பந்துகளில் ஒன்று தான் ரப்பர் பந்து.
                அது தொழில் எனும் பந்து கீழே விழுந்தாலும் உடையாது ;
                கைக்கு திரும்பிவிடும் .
                 மற்ற மூன்று பந்துகளும் கண்ணாடி பந்துகள் கீழே
                 விழுந்தால் உடைந்து விடும்.

கேள்வி : காலையில் எழுந்ததும் என் கண்ணில் படுமாறு ஒரு வாசகம்
                  சொல்லுங்களேன் ...
பதில் :    "நின்ற இடத்தில நிற்க வேண்டுமா ?
                ஓடிக்கொண்டே இரு "

கேள்வி : வாழ்க்கை என்பது ....?
 பதில் :  கல்யாணத்திற்கும் இழவிற்கும் ஆள் சேர்க்கும் போராட்டம் .

கேள்வி : யார்  ஞானி ?
 பதில்  :   நான்மறையை கற்றவன் அல்லன் ஞானி
                " நான்" மறையக் கற்றவனே ஞானி.

கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?
பதில் :    சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்
                 சோறு
                 அரிசி
                 விதைநெல் என்பதை போல
                 சோறு - இன்றையத்தேவை
                 அரிசி - நாளையத்தேவை
                 விதைநெல் - எதிர்காலத்தேவை

கேள்வி :வாழ்க்கை எங்கே இருக்கிறது?
பதில்:      இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட
                 வேண்டும் உணவை;
                 இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட
                 வேண்டும் கலவியை;
                 இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட
                 வேண்டும் பணத்தை.
                 இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட
                 வேண்டும் மூச்சை.
                 இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும்
                 இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது
                 பாவப்பட்ட மனித வாழ்க்கை.

கேள்வி:  ஒரு பெயரைக்கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை
                 கண்டுபிடிக்க முடியுமா?
பதில் :    எதிர்காலம் தெரியுமோ இல்லையோ.... சில பெயர்களை
                 கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும்
                 குப்புஸ்வாமி
                 குப்புசாமி
                 குப்பு
                 குப்பன்
                 இந்த நான்கும் வெறும் பெயர்கள் மட்டுமல்ல; வர்க்க
                அடுக்குகள் ஜாதி -பொருளாதாரம் - வாழ்நிலை - மனநிலை
                போன்றவற்றை மங்கலாக காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம்
                இந்தப்பெயர்கள்.

கேள்வி உங்கள் மகன்களை என்ன சொல்லி வளர்த்திருக்கிறீர்கள்?
பதில்:     போராடுங்கள்!
                செருப்பு தைத்தாலும் செயற்கைகொள் செய்தாலும் அதில்
                முதலிடத்தில் இருங்கள்!
                 எந்தப் போர்க்களத்திலும் உங்கள் முதல் ஆயுதம் சத்தியமாக
                 இருக்கட்டும். சத்தியம் உங்கள் பகைவரின் வலிமை
                 பாதியாகி விடும்.
                 உங்கள் வெற்றி தனிமனித வெற்றியாக குறுகி விடாமல்
                 சமூக வெற்றியாக நீளட்டும்.
                 எந்த வெற்றியும் மனித நேயத்தில் நீளட்டும்.

பதிவின்  நீளம் கருதி இதோடு முடித்து கொள்கிறேன்.
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமிது.

வெளியீடு : சூர்யா பதிப்பகம்
விலை : ரூ.150
பக்கங்கள்- 308


நன்றிகளுடன் ,
ஜி. ராஜ்மோகன்

Thursday, November 18, 2010

படித்துப்பிடித்த பிடித்துப்படித்த புத்தகங்கள்

ஓவ்வொரு தனி மனிதன் வளர்ச்சிக்கும் ,வெற்றிக்கும் எப்படி  அவரது பெற்றோரும் ,ஆசிரியர்களும் 
எவ்வாறு உதவுகிறார்களோ அது போலவேதான் அவன் படிக்கும் 
புத்தகங்களும் உதவுகின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது . 
புத்தகங்கள் மனிதனை பண்படுத்துகிறது.அப்படி நான் படித்த சில நல்ல புத்தகங்களைப்பற்றிஇங்கே பகிர்ந்து கொள்ளப்போகிறேன் . என்னுடைய 
பதின் வயதில் எழுத்தாளர் பட்டுக்கோட்டைபிரபாகர் அவர்கள் எழுதிய
 புத்தகங்களை மட்டுமே படித்து வந்தேன் .அவ்வப்போது ராஜேஷ்குமார் 
நாவல்களையும் படிப்பதுண்டு .பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஏறக்குறைய அனைத்து  நாவல்களையும்  படித்திருப்பேன் என்றே நினைக்கிறன்.வெகுஜனஇதழ்களில் எழுதினால் அவை நல்லஇலக்கியமாக 
கருதப்படுவதில்லை.ஆனால் பி.கே.பி யின் சமூக நாவல்கள் தான் என்னுள் 
ஒரு பக்குவத்தை ஏற்படுத்தியது .குறிப்பாக  "தொட்டால் தொடரும்", " ஜன்னல் கைதிகள்", "கனவுகள் இலவசம்" ,"கொஞ்சம் காதல் வேண்டும்"
"எப்படியும் ஜெயிக்க வேண்டும்","கத்திக்கப்பல்" "சண்டிக்குதிரை" போன்ற நாவல்கள் என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்." கொஞ்சம் காதல் வேண்டும்" நாவலின் பாதிப்பை "முகவரி" திரைப்படத்தில் காணலாம். பி.கே. பியின் எழுத்தில் எப்போதும் ஒரு யதார்த்தம் இருக்கும். ஆனால் அவர் சமூக நாவல்களை காட்டிலும் கிரைம் நாவல்களில் தான்
அதிகம் பேசப்பட்டார். அவரது கதாபாத்திரங்கள் பரத் - சுசீலாவை யாராலும் மறக்கமுடியாது.இப்பொழுது அவர் அதிகம் எழுதுவதில்லை.

என்னுடைய இருபதாவது வயதில் தான் எனக்கு "எழுத்துசித்தர்" பாலகுமாரன் அவர்களின்  எழுத்து அறிமுகமானது.அதற்கு முன்பு பாலகுமாரனை படித்தால் பத்துப்பக்கங்களுக்கு மேல் படிக்க முடிந்ததில்லை.சில காலம் கழித்து அவரின் எழுத்துகள் எனக்கு பிடிபட ஆரம்பித்தன.பின்னர் வெறிகொண்டு அவரது எழுத்துகளை தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன்.அவரது எழுத்துக்கள் என்னுள் ஒரு புதிய மனிதனை உருவாக்கியது என்றே சொல்லலாம்.குறிப்பாக "இரும்புக்குதிரைகள்", "மெர்குரிப்பூக்கள்", "கரையோர முதலைகள்",  "நீ வருவாயென", "இனிது இனிது காதல்இனிது", "பயணிகள் கவனிக்கவும்", நெளி மோதிரம்"இன்னும் எத்தனையோ சொல்லக்கொண்டே போகலாம் .

அதன் பின்னர் கவிப்பேரரசு  வைரமுத்து அவர்களுடைய படைப்புக்களை வாசிக்க ஆரம்பித்தேன்.அவரது "தண்ணீர் தேசம்" கதையை ஒரே மூச்சில் வாசித்தேன். சத்தியமாக இந்த நூல் ஒரு விஞ்ஞான காவியம் தான். தமிழில் டைட்டானிக் கதையை எழுதி இருந்தால் எப்படி இருக்குமோ 
அப்படிப்பட்ட ஒரு படைப்பு அது. அவரது பிற படைப்புகள் "மீண்டும் என் தொட்டிலுக்கு","காவி நிறத்தில் ஒரு காதல்", " ஒரு போர்க்களமும் இரண்டு  பூக்களும்", "இதனால் சகலமானவர்களுக்கும்", "வடுகபட்டி முதல்
வால்காவரை"," சிற்பியே உன்னை செதுக்குகிறேன்", "கவிராஜன் கதை", "இந்தக்குளத்தில் கல் எறிந்தவர்கள்""இந்த பூக்கள் விற்பனைக்கல்ல", "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்", "பெய்யனபெய்யும் மழை", "ரத்த தானம்"
"கள்ளிகாட்டு இதிகாசம்", "கருவாச்சி காவியம்"' "பாற்கடல்" முதலிய படைப்புகள் மிக அற்புதமானவை.
அனைவரும் படிக்க வேண்டியவை.

அதன் பின்னர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின்  இணையத்தளம் மூலமும் "கதாவிலாசம்"
என்ற புத்தகத்தின்  மூலமும் நிறைய படைப்பாளிகளைப்பற்றி தெரிந்துகொண்டேன் . அப்படிப்பட்ட படைப்பாளிகளின் படைப்புகளில்
நான் விரும்பிப்படித்த சில படைப்புகள் :

நெடுங்குருதி - எஸ். ராமகிருஷ்ணன்
யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
உபபாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்
உறுபசி -எஸ்.ராமகிருஷ்ணன்
அனல்காற்று - ஜெயமோகன்
ரப்பர் - ஜெயமோகன்
ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
கரைந்த நிழல்கள்- அசோகமித்திரன்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
காகித மலர்கள் -ஆதவன்
சூரிய வம்சம் - சா. கந்தசாமி
வாடாமல்லி - சு. சமுத்திரம்
பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு
தலைமுறைகள் -நீல. பத்மநாபன்
ஒற்றன் - அசோகமித்திரன்
கூகை -சோ .தர்மன்
கள்ளி -வாமு .கோமு
சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் - வாமு.கோமு
எரியும் பனிக்காடு - பி.ஹச்.deniyal
ஏறுவெயில் -பெருமாள் முருகன்
ரெண்டு - பா.ராகவன்
தூணிலும் இருப்பான் -பா. ராகவன்
நான்காவது எஸ்டேட் - கிருஷ்ணா டாவின்சி
மூன்று விரல் - இரா .முருகன்
அரசூர் வம்சம் -இரா.முருகன்
சத்திய சோதனை -இந்திரா பார்த்தசாரதி
தந்திர பூமி -இந்திரா பார்த்தசாரதி
மானிடம் வெல்லும் - பிரபஞ்சன்
காதலெனும் ஏணியிலே - பிரபஞ்சன்
வானம் வசப்படும் -பிரபஞ்சன்
சோளகர் தொட்டி- பாலமுருகன்
சமுதாய வீதி- நா. பார்த்தசாரதி
துளசிமாடம் - நா. பார்த்தசாரதி
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்
பாரிசுக்குப்போ - ஜெயகாந்தன்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்
பொய்த்தேவு - கா. நா .சுப்ரமணியம்
காதுகள் - எம்.வி. வெங்கட்ராம்
ரத்தம் ஒரே நிறம்- சுஜாதா
நைலான் கயிறு - சுஜாதா
சித்திரப்பாவை - அகிலன்
காலம் - வண்ணநிலவன்
இவை அனைத்தும் புதினங்கள் பட்டியல் மட்டுமே .
இது தவிர சிறுகதை தொகுப்புகள், கட்டுரை தொகுப்புகள்
பட்டியல் அடுத்த பதிவில் .