மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
Thursday, January 20, 2011

படித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் " சாகாவரம்" நாவல்

நான் படித்த மற்றும் படித்து கொண்டிருக்கும் பல்வேறு
புத்தகங்களை பற்றி கொஞ்சம் எழுதினால் மற்றவர்களுக்கும் அது உபயோகமாக இருக்கும் என்பதால் இனி உங்கள் வாசிப்பிற்காக .

படித்ததில் பிடித்தது ......... :"சாகாவரம்" நாவல் - வெ.இறையன்பு

 பல்வேறு தலைப்பில் கட்டுரை  தொகுப்புகள்  எழுதி வந்த வெ.இறையன்பு
 I .A .S அவர்களின் இரண்டாவது நாவல்" சாகாவரம்" .
இவரது முதல் நாவல் " ஆத்தங்கரை ஓரம்" என்ற நாவலாகும்.
சாகாவரம் நாவல் மூலம் தன்னை ஒரு தேர்ந்த படைப்பாளி என்று
மீண்டும் நிரூபித்து இருக்கிறார் இறையன்பு.

 நாவலை படிக்க படிக்க புத்தகத்தை கீழே வைக்க
முடியாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன் .இந்த நாவல்
மரணத்தை பற்றிய ஒரு தேடலாகும்.நாவல் மரணம் ,
பயணம் ,சலனம் என்ற மூன்று பகுதிகளை கொண்டது.
கதையின் நாயகன் நசிகேதன் ஒரு பள்ளி ஆசிரியர்.
முப்பத்தைந்து வயதாகியும் திருமணமே வேண்டாம் என்று
பிரம்மச்சாரியாக வாழ்ந்து வருபவன். வாழ்வில் மிகப்பெரிய
தேடல்கள் எதுவும் இல்லாமல் தன் பணியை மட்டும்
நேசித்து செய்து வருபவன் .

நசிகேதனுடைய நெருங்கிய நண்பர்கள் நான்கு பேர் ஒவ்வொருவராக
 அடுத்தடுத்து மரணமடைகிறார்கள். இந்த மரணங்கள் தந்த பாதிப்பால்
நசிகேதன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.பள்ளியிலும் சரிவர
பாடம் நடத்த முடியாமல் கஷ்டபடுகிறான்.மாணவர்கள் தலைமை
ஆசிரியரிடம் இவனைப்பற்றி புகார் தெரிவிக்கிறார்கள்.

அவனுக்கு மரணத்தை பற்றிய ஒரு பயம் உருவாகிறது .இதனால்
வேலையை விட்டு விட்டு மரணத்தை பற்றி தெரிந்து கொள்ள தன்
பயணத்தை துவக்குகிறான். வழியில் பிரக்ஞ்சா என்ற சாமியாரை
சந்திக்கிறான். அவர் இவன் தேடலுக்கு விடை கொல்லிமலையில்
உள்ள ஞானி ஒருவரிடம் இருக்கிறது அவரை போய் சந்திக்குமாறு
கூறுகிறார். நசிகேதனும் கொல்லிமலை நோக்கி பயணிக்கிறான்.
அந்த ஞானியையும் சந்தித்து விடுகிறான்.

 அவருடனே சேர்ந்து கொல்லிமலையில் தங்குகிறான்.
தனக்கு மரணமில்லா பெருவாழ்வு வேண்டும் என்கிறான் .
அந்த ஞானி இவனுக்கு பல விசயங்களை
கற்றுத்தருகிறார். ஒரு மூட்டை நிறைய பழைய
ஓலைச்சுவடிகளை தந்து " நீ தேடி வந்த கேள்விக்கு பதில் இந்த
ஓலைச்சுவடிகளில் உள்ளது படித்து தெரிந்து கொள்"என்று கூறுகிறார்.

அவனும் அந்த ஓலைச்சுவடிகளை பொறுமையாக படித்து மரணத்தை
பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்கிறான். தீடிரென்று
அந்த ஞானியும் ஒரு இரவில் மரணமடைந்து விடுகிறார்.
அங்கிருக்கும் காட்டுவாசிகளுடன்  சேர்ந்து ஞானியின்
இறுதி கடமையை முடித்துவிட்டு அந்த ஓலைச்சுவடிகளில்
குறிப்பிட்டுள்ள குறுப்புகளின்படி மரணமே நிகழாத " சிரஞ்சீவி வெளி"
என்ற தீவை நோக்கி பயணம் மேற்கொள்கிறான்.

முடிவில் சிரஞ்சீவி வெளியை ஒரு வழியாக கண்டுபிடித்து அங்கு
செல்கிறான் . அந்த தீவிற்கு உள்ளே சென்றவர்கள் திரும்பி
வர இயலாது .அந்த தீவில் இவனை போல நிறைய பேர்
இருக்கிறார்கள்  தீவிலிருக்கும் ஒவ்வொருவரின் கதையை
கேட்கும்  போது தான் அவனுக்கு  தெரிகிறது தான் ஒரு
தப்பான இடத்திற்கு வந்துவிட்டோம் என்று .
அந்த தீவில் எல்லாமே நேர்மாறாக இருக்கிறது.

ஒரே மாதிரி காற்று
ஒரே மாதிரி வெளிச்சம்
ஒரே மாதிரி தட்பவெப்பம்
ஒன்று போல பழங்கள்
நிர்வாண ஆட்கள்
பாடாத பறவைகள்

இப்படி எல்லாமே ஒரே மாதிரி சுவாரசியம் இல்லாமல்
இருக்கிறது.  அவன் நினைவு பின்னோக்கி அழைத்து
செல்கிறது . அப்பொழுது தான் அவன் புரிந்து கொள்கிறான் .
நிரந்தரமானவை எதுவும் அழகு கிடையாது,மாற்றங்கள்
மட்டுமே அழகு என்று.மேலும்  மரணம் மட்டுமே உண்மையானது
என்று அந்த தீவு அவனுக்கு உணர்த்துகிறது  என்று நாவல் முடிகிறது.

இந்த நாவல் ஒரு ஆத்ம விசாரணையை நம்முள்
ஏற்படுத்துகிறது. இந்த நாவல் கண்டிப்பாக உங்களையும்
பாதிக்கும் என்று நம்புகிறேன் .படித்து பாருங்கள் .

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை : ரூ 110 /-
பக்கங்கள் -224

என்றும் நன்றிகளுடன் ,
ஜி .ராஜ்மோகன்

Wednesday, January 12, 2011

படித்ததில் பிடித்தது - வண்ணநிலவனின் "காலம்" புதினம்

படித்ததில் பிடித்தது - வண்ணநிலவனின் "காலம்" புதினம்.

வண்ணநிலவன் அவர்கள் எழுதிய "காலம்" புதினம் மிக அருமையான
புதினமாகும். வண்ணநிலவன் அவர்கள் சில காலம் திருநெல்வேலியில்
ஒரு வக்கீலிடம் பணிபுரிந்திருக்கிறார். அப்போது அவர் அவதானித்த
சில விஷயங்களை வைத்து காலம் புதினத்தை அவர் எழுதியிருக்கிறார்.
 நாவல்,படிப்பவர்களை அவர்கள் கைபிடித்து கூட்டிச்செல்லும் மிக
எளிமையான நடையில் உள்ளது.

 இந்தக்கதையின் நாயகன் நெல்லையப்பன் இருபது வயதுகளின் 
 மத்தியில் இருப்பவன். ஒரு வக்கீலிடம் குமாஸ்தாவாக சொற்ப ,
சம்பளத்திற்கு வேலைப்பார்க்கிறான். அவனது அப்பா
ஒரு மளிகைக்கடையில் வேலைப்பார்க்கிறார். கல்யாணமான
அவனது அக்காவும் மச்சானும் இவனது வீட்டிலேயே
தங்கி இருக்கிறார்கள்.

நெல்லையப்பனுக்கு கோர்ட்டும்
வீடும் மட்டுமே உலகம். அது தவிர சினிமா பார்ப்பதும்
இலக்கியம் படிப்பதும் அவனுக்கு பொழுதுபோக்கு.
இவனது எதிர் வீட்டிலிருக்கும் இவன் அக்கா வயதுள்ள 
காந்திமதி இவனிடம் தோழி மாதிரி பழகுகிறாள் .
அவனுக்கும் அவளை ரொம்பப்பிடிக்கும் . நெல்லையப்பனை
போல காந்திமதிக்கும் இலக்கியத்தில் ஆர்வமுண்டு
.தாங்கள் படித்ததை இருவரும் பகிர்ந்து கொள்வதுண்டு .
காந்திமதி சங்கரன் என்பவனை காதலிக்கிறாள். நெல்லையப்பனும் 
சங்கரனை மச்சான் என்றே அழைக்கிறான் . 
நெல்லையப்பனுடன் வேலை பார்க்கும் பெரிய குமாஸ்தா சிதம்பரம்பிள்ளைக்கு தன் மகளை நெல்லையப்பனுக்கு 
கல்யாணம் பண்ணி கொடுக்க ஆசை . நெல்லையப்பன்
அப்பாவிற்க்கோ சொத்து வைத்திருக்கும் தன்தங்கை மகளான
 மீனாச்சிக்கு கட்டிக்கொடுக்க ஆசை.
நெல்லையப்பனுக்கோ சென்னை சென்று இன்னும்
 நிறைய சம்பளம் கிடைக்கும் வேலையில்
சேர வேண்டும் என்று ஆசை.

இந்நிலையில் நெல்லையப்பனுக்கு காந்திமதி மீது
உள்ளூர ஒரு இனக்கவர்ச்சி ஏற்படுகிறது.
நெல்லையப்பனின் அப்பாவோ தன் தங்கை மகளுக்கு
நெல்லையப்பனை பேசி முடித்துவிடுகிறார் .நெல்லையப்பனும் 
வேறு வழியில்லாமல் கல்யாணத்திற்கு ஒத்து கொள்கிறான் 
என்று கதை முடிகிறது . 

கதையின் வாயிலாக வண்ணநிலவன்  திருநெல்வேலியை
நம் கண்முன்னே நடமாட விடுகிறார். கோர்ட் காட்சிகளை
அவர் எழுதியிருக்கும் விதம் படிக்கும் போது ஏதோ
சினிமாவை பார்ப்பது போல் இருக்கிறது.
இருபது வயதுகளில் இருக்கும் இளைஞர்களின்
மனஓட்டத்தை, தடுமாற்றத்தை தன் எழுத்தின் வழியே
அப்படியே பதிவு செய்திருக்கிறார். வண்ணநிலவனின்
சிறப்பு அவர் காட்சிகளை விவரிக்கும் விதமாகும்.
பீர்பாத் ஹோட்டல் ,  கோர்ட் காண்டீன், தாமிரபரணி ஆறு
போன்றவை அவரது கதையின் கதாபாத்திரங்களாகவே
மாறிவிடுகின்றன .

அனைவரும் படிக்க வேண்டிய புதினம் இது .
ஆனந்த விகடன் பதிப்பாகவும் ,கிழக்கு பதிப்பாகவும்
 இது வெளிவந்திருக்கிறது.

 என்றும் நன்றிகளுடன்,

ஜி.ராஜ்மோகன்

Friday, December 31, 2010

கொஞ்சம் யோசிங்க - இந்த ஆண்டு எடுக்க வேண்டிய புத்தாண்டு தீர்மானங்கள்

அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய இந்த ஆண்டு
புத்தாண்டு தீர்மானங்கள்.
பொதுவாக எனக்கு புத்தாண்டு தீர்மானங்களில் நம்பிக்கை இல்லை.
இருப்பினும் ஊரோடு ஒத்துப்போகிறேன். நாம் அனைவரும்
நம்முடைய நன்மைக்காக , நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்மைக்காக
நம் நாட்டினுடைய நன்மைக்காக எடுக்க வேண்டிய சில
தீர்மானங்கள் உள்ளன . அறிஞர் அண்ணா சொன்னது போல
வீடு எப்படியோ நாடும் அப்படித்தான் இருக்கும். என்னை
பொறுத்தவரையில் தனிமனிதன் எப்படியோ அப்படித்தான்
அவன் நாடும் இருக்கும்.இந்த புத்தாண்டில் நாம் எடுக்க
வேண்டிய சில தீர்மானங்கள்
1 .  குறைந்த பட்சம் ஒருவர் ஒரு மரக்கன்றையாவது  இந்த
      ஆண்டில் நடவேண்டும்.
2 .  முடிந்தவரை கார், பைக் போன்ற வாகனங்களை தவிர்த்து
      பொது வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.இதனால்
      நாட்டின் எரிபொருள் தேவையை நம்மால் இயன்றவரை
      சேமிக்க முடியும்.
3 .  வீட்டில் , அலுவலகங்களில் குண்டு பல்புகளை பயன்
      படுத்துவதை தவிர்த்து CFL  பல்புகளை பயன்படுத்துவோம்.
4 .  போக்குவரத்து விதிகளைப்பின்பற்றுவோம் .
5 .  ஓட்டுக்கு காசு வாங்குவதை தவிர்ப்போம்.
6 .  தேர்தலில் கண்டிப்பாக வாக்களித்து நம் ஜனநாயக கடமையை
      ஆற்றுவோம்.
7 .  திறந்த வெளிகளில் மல, ஜலம் கழிப்பதை தவிர்ப்போம்.
8 .  பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்ப்போம்.
9 .  ஒவ்வொரு வீட்டிலும் மழை நீரை சேகரிக்க முயற்சி
      செய்வோம்.
10 .ஹாப் அடிப்பவர்கள் க்வாட்டர் அடிக்கவும் க்வாட்டர்
     அடிப்பவர்கள் கட்டிங் அடிக்கவும் கட்டிங் அடிப்பவர்கள்
      ஒரு அவுன்ஸ் அடிக்கவும் முயற்சி செய்வோம்.
      (டாஸ்மாக்கின் நலன் கருதி தயவு செய்து யாரும்
      குடிப்பதை நிறுத்திவிட வேண்டாம் . ஏன் என்றால்
      தமிழக அரசை வாழ வைப்பதே டாஸ்மாக் தான்
      என்பதை மறந்து விட வேண்டாம் ).ஹி ..... ஹி..
11 . பீர் அடிப்பவர்கள் ஹாட்டுக்கு மாறாமல் இருக்க முயற்சி
      செய்வோம்.
12 . இரண்டு பாக்கெட் சிகரெட் அடிப்பவர்கள் ஒரு பாக்கெட்டும்
      ஒரு பாக்கெட் அடிப்பவர்கள் அரை பாக்கெட்டாகவும்
      குறைத்துக்கொள்ள முயற்சிப்போம்.
13  திருட்டு விசிடி யில் படம் பார்க்காமல் இருக்க முயற்சி
      செய்வோம்.
14 .குழந்தைகளை வேலைக்கு அமர்த்தாமல் இருப்போம் .
15 . மிக முக்கியமாக சக மனிதனை மனிதனாக மதிப்போம்.

எந்த ஒரு மனிதனும் மற்றவர்கள் இது போல் இருக்க
வேண்டும் என்று நினைக்கிறான் ஆனால் யாரும் தன்னை
மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை.

மாறுவோம் வளருவோம்.

அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஜி.ராஜ்மோகன்

Tuesday, December 28, 2010

1955 ஆம் ஆண்டு முதல் தமிழில் இதுவரை சாஹித்ய அகாடமி விருதுபெற்றவர்களின் பட்டியல்

சாஹித்ய அகாடமி விருதுகள் 1955 ஆம் ஆண்டு 
முதல் வருடம் தோறும் நாட்டிலுள்ள 24  மொழிகளுக்கு வழங்கப்படுகிறது.
எழுத்தாளர்களை கவுரவ படுத்தும் நோக்கில் இவ்விருதுகள்
வழங்கப்படுகின்றன. இவ்விருதை பெரும் எழுத்தாளர்களுக்கு
ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப்பணமும் பதக்கமும்
வழங்கப்படும்.
இந்த வருடம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு சாஹித்யஅகாடமி
 விருது கிடைத்திருக்கும் இந்த நேரத்தில்  தமிழில் இதுவரை
சாஹித்ய அகாடமி விருதுபெற்றவர்களின் பட்டியல் உங்கள் 
பார்வைக்கு .
ஆண்டு         நூல்                                                    வகை                               எழுத்தாளர் பெயர்
1955     தமிழ்  இன்பம்                                      கட்டுரைகள்                        ரா. பி. சேதுபிள்ளை
1956    அலைஓசை                                          நாவல்                                    கல்கி
1958    சக்கரவர்த்தி திருமகள்                  கதை                                       ராஜாஜி
1961    அகல்விளக்கு                                       நாவல்                                   மு.வரதராசன்
1962    அக்கரைசீமையிலே                         பயணஇலக்கியம்           மீ.ப.சோமசுந்தரம்
1963     வேங்கையின் மைந்தன்              வரலாற்று நாவல்        அகிலன்
1965      ஸ்ரீ ராமானுஜர்                                   வாழ்க்கை வரலாறு     பி.ஸ்ரீ. ஆச்சார்யா
1966       வள்ளலார் கண்ட 
               ஒருமைப்பாடு                                    திறனாய்வு                          ம. பொ.சிவஞானம்
1967       வீரர் உலகம்                                       கட்டுரை                               கி. வா. ஜெகநாதன்
1968     வெள்ளைப்பறவை                          கவிதை                                அ. சீனிவாசராகவன்
1969     பிசிராந்தையார்                                   நாடகம்                                 புரட்சிகவிஞர் பாரதிதாசன்
1970     அன்பளிப்பு                                              சிறுகதை                             கு.அழகிரிசாமி
1971      சமுதாய வீதி                                       நாவல்                                   நா. பார்த்தசாரதி
1972      சில நேரங்களில் 
             சில மனிதர்கள்                                    நாவல்                                   ஜெயகாந்தன்
1973      வேருக்கு நீர்                                         நாவல்                                   ராஜம்கிருஷ்ணன்
1974      திருக்குறள் நீதி இலக்கியம்       திறனாய்வு                         க. த.திருநாவுக்கரசு
1975       தற்கால தமிழ் இலக்கியம்         திறனாய்வு                         ரா. தண்டாயுதம்
1977       குருதிப்புனல்                                         நாவல்                                  இந்திரா பார்த்தசாரதி
1978      புதுக்கவிதையின் தோற்றமும்
              வளர்ச்சியும்                                            திறனாய்வு                        வல்லிகண்ணன்
1979      சக்தி வைத்தியம்                                சிறுகதை                            தி.ஜானகிராமன்
1980      சேரமான் காதலி                                  நாவல்                                 கவியரசு கண்ணதாசன்
1981      புதிய உரைநடை                                 திறனாய்வு                        மா. ராமலிங்கம்
1982     மணிக்கொடி காலம்                           திறனாய்வு                        பி. எஸ். ராமையா
1983     பாரதி காலமும் கருத்தும்             திறனாய்வு                        தொ. மு.சி. ரகுநாதன்
1984     ஒரு காவிரியை போல                    நாவல்                                 லக்ஷ்மி
1985     கம்பன்: புதிய பார்வை                       திறனாய்வு                        அ.ச. ஞானசம்பந்தன்
1986     இலக்கியத்துக்கு ஓர் இயக்கம     திறனாய்வு                        க. நா.சுப்பிரமணியன்
1987     இரவுக்குமுன்புவருவது மாலை  சிறுகதை                          ஆதவன்
1988     வாழும் வள்ளுவம்                                 திறனாய்வு                      வா.செ.குழந்தைசாமி 
1989     சிந்தாநதி                                                      தன் வரலாறு                 லா.சா .ராமாமிர்தம் 
1990     வேரில் பழுத்த பலா                                நாவல்                                 சு. சமுத்திரம் 
1991     கோபல்லபுரத்து மக்கள்                        நாவல்                                 கி .ராஜநாராயணன் 
1992    குற்றால குறவஞ்சி                                 வரலாற்று நால்              கோவி.மணிசேகரன் 
1993      காதுகள்                                                         நாவல்                                 எம்.வி.வெங்கட்ராம் 
1994      புதிய தரிசனங்கள்                                  நாவல்                                 பொன்னீலன் 
1995      வானம் வசப்படும்                                  நாவல்                                  பிரபஞ்சன் 
1996     அப்பாவின் சிநேகிதர்                             சிறுகதை                             தோப்பில் முகமது மீரான் 
1997     சாய்வு நாற்காலி                                       நாவல்                                   அசோகமித்திரன்
1998     விசாரணை கமிஷன்                            நாவல்                                   சா. கந்தசாமி 
1999     ஆலாபனை                                                  கவிதை                                அப்துல் ரகுமான்
2000     விமர்சனங்களின் மதிப்புரைகள்   பேட்டிகள்                             தி.க.சிவசங்கரன்
2001      சுதந்திர தாகம்                                           நாவல்                                  சி.சு.செல்லப்பா
2002      ஒரு கிராமத்து நதி                                 கவிதை                          சிற்பி பாலசுப்ரமணியம்
2003       கள்ளிக்காட்டு இதிகாசம்                    நாவல்                                    கவிஞர் வைரமுத்து
2004       வணக்கம் வள்ளுவ                             கவிதை                                  கவிஞர் தமிழன்பன்
2005       கல்மரம்                                                        நாவல்                                      ஜி.திலவதி
2006       இலையுதிர் காலம்                               நாவல்                                       நீல.பத்மநாபன்
2007        மானாவாரிப்பூ                                        சிறுகதைகள்               மேலாண்மைபொன்னுசாமி 
2008       கையொப்பம்                                            கவிதை                                      புவியரசு 
2009       சூடிய பூ சூடற்க                                    சிறுகதைகள்                            நாஞ்சில் நாடன்


1957 ,1959 , 1960 ,1964 மற்றும்  1976  ஆகிய ஆண்டுகளில்  விருது வழங்கப்படவில்லை .


Wednesday, December 15, 2010

படித்ததில் பிடித்தது- கவிப்பேரரசு வைரமுத்துவின் "பாற்கடல்" - கேள்வி-பதில் தொகுப்பு புத்தகம்

குமுதம் வார இதழில் வெளிவந்த கவிப்பேரரசு வைரமுத்து
அவர்களின் கேள்வி -பதில்களின் தொகுப்பே இந்த "பாற்கடல்"
புத்தகம். நம்மில் பலபேர் குமுதம் இதழில் இதை
வாசித்திருக்க கூடும். ஆனாலும் புத்தக வடிவில் மீள்வாசிப்பு
செய்யும் போது இன்னும் ஆழ்ந்து படிக்க முடிகிறது. .மொத்தம் 378 வாசகர்
கேள்விகளுக்கு வைரமுத்து அவர்கள் அளித்துள்ள பதில்கள்
இந்தபுத்தகத்தில் உள்ளன.   பதில்கள் ஒவ்வொன்றும் அருமை.
 சினிமா ,கலை, இலக்கியம், பொதுஅறிவு, வரலாறு, அரசியல்,
கவிதை,மொழியியல்,அறிவியல்  என்று பலதரப்பட்ட கேள்விகளுக்கு
அவர் அளித்திருக்கும் பதில் சிந்தனையை தூண்டக்கூடியவை.
இது ஒரு கேள்வி- பதில் தொகுப்பாக மட்டுமல்லாமல்
ஒரு கலைகளஞ்சியமாகவே இருக்கிறது. விளக்குமாறு
செய்வது எப்படி? என்ற கேள்வி முதல் எரிமலைகள் ஏன்
வெடிக்கின்றன? என்ற கேள்வி வரை அவரது பதில்கள்
மிக சுவாரஸ்யமாகவும் பல தகவல்களை நமக்கு தரும்
விதமாகவும் அமைந்துள்ளது.கண்டிப்பாக நாம்
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமிது.

வைரமுத்து அவர்களின் முன்னுரையில் இருந்து சில
வரிகள் :
கேள்விகள் சாவிகள்; பூமியின் புதிர்களை வாழ்வின்
ரகசியங்களை அவை திறக்கின்றன.
கேட்கப்பட்ட கேள்விகளால் தன்னைதிறந்து கொண்ட
பிரபஞ்சம் கேட்கப்படாத கேள்விகளுக்காக ஆயிரம் கோடி
ஆண்டுகளாய் அகலிகைக்கல்லாய்க் கிடக்கிறது அப்படியே.
ஆதியில் கேள்வியில்லை; அச்சமே இருந்தது; பசியே
இருந்தது; ஓட்டமும் தப்பிதலுமே இருந்தது;
ஏன் அச்சப்படுகிறோம் என்பதுதான் மனிதகுலத்தின்
முதல் கேள்வி என்கிறது மானுடவியல் .
ஒரு காலத்தில் வழியும் ரத்தம் உறையாமலே வழிவழியாக
இறந்து கொண்டிருந்தார்கள் எகிப்திய அரசர்கள் .
ஏன் இந்த மரண சம்பவம் என்ற கேள்விக்கான விடையில்
உறவுமுறைகளே மாறின .அதுவரைக்கும் எகிப்திய அரசர்கள் தங்கள் சகோதரிகளையும் எகிப்திய அரசிகள் தங்கள் சகோதரரர்களையுமே மணந்து
வந்தார்கள். எகிப்திய அழகி கிளியோபாட்ராவின் முதல் கணவன்
ராமேஷாய் என்பவன் அவள் உடன் பிறந்த அண்ணன்.
ரத்தசம்பந்தமுள்ள தாம்பத்திய உறவுகளின் காரணமாகத்தான்
உடற்கேடுகள் உண்டாகின்றன என்று கண்டறியப்பட்ட போது
சகோதர திருமணங்கள் முடிவுக்கு வந்தன.

இப்புத்தகத்தில் நான் படித்து ரசித்த சில கேள்வி பதில்கள்.

கேள்வி : கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள்?
பதில்:       மேக்- அப்பை கலைத்து விட்டு வாருங்கள்
                  டீ சாப்பிட்டு விட்டு வரலாம் என்பேன்.

கேள்வி:  துபாய் தமிழ்ச்சங்கத்தில் பேசும் போது நன்கு பந்துகளை
                 சொல்லி வாழ்க்கை தத்துவம் சொன்னீர்களே அது பற்றி?
பதில் :   " ஒவ்வொரு மனிதனும் நான்கு வகை பந்துகளோடு
                 பயணமாகிறான் .
                 வலக்கரத்தில் ஒரு பந்து ;இடக்கரத்தில் ஒரு பந்து
                 வலகக்கத்தில் ஒரு பந்து;  இடக்கக்கத்தில் ஒரு பந்து ;
                 ஒரு பந்துக்கு பெயர் தொழில் ;இன்னொரு பந்துக்கு பெயர்
                 குடும்பம் ;வேறொரு பந்துக்கு பெயர் நட்பு;
                 மற்றொரு பந்துக்கு பெயர் உடல்நலம் ;
                 இந்த நான்கு பந்துகளும் விழுந்து விடாமல் கடைசி வரை
                 கரை சேர்பவனே கடமை வீரன் .
                 நான்கு பந்துகளில் ஒன்று தான் ரப்பர் பந்து.
                அது தொழில் எனும் பந்து கீழே விழுந்தாலும் உடையாது ;
                கைக்கு திரும்பிவிடும் .
                 மற்ற மூன்று பந்துகளும் கண்ணாடி பந்துகள் கீழே
                 விழுந்தால் உடைந்து விடும்.

கேள்வி : காலையில் எழுந்ததும் என் கண்ணில் படுமாறு ஒரு வாசகம்
                  சொல்லுங்களேன் ...
பதில் :    "நின்ற இடத்தில நிற்க வேண்டுமா ?
                ஓடிக்கொண்டே இரு "

கேள்வி : வாழ்க்கை என்பது ....?
 பதில் :  கல்யாணத்திற்கும் இழவிற்கும் ஆள் சேர்க்கும் போராட்டம் .

கேள்வி : யார்  ஞானி ?
 பதில்  :   நான்மறையை கற்றவன் அல்லன் ஞானி
                " நான்" மறையக் கற்றவனே ஞானி.

கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?
பதில் :    சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்
                 சோறு
                 அரிசி
                 விதைநெல் என்பதை போல
                 சோறு - இன்றையத்தேவை
                 அரிசி - நாளையத்தேவை
                 விதைநெல் - எதிர்காலத்தேவை

கேள்வி :வாழ்க்கை எங்கே இருக்கிறது?
பதில்:      இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட
                 வேண்டும் உணவை;
                 இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட
                 வேண்டும் கலவியை;
                 இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட
                 வேண்டும் பணத்தை.
                 இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட
                 வேண்டும் மூச்சை.
                 இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும்
                 இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது
                 பாவப்பட்ட மனித வாழ்க்கை.

கேள்வி:  ஒரு பெயரைக்கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை
                 கண்டுபிடிக்க முடியுமா?
பதில் :    எதிர்காலம் தெரியுமோ இல்லையோ.... சில பெயர்களை
                 கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும்
                 குப்புஸ்வாமி
                 குப்புசாமி
                 குப்பு
                 குப்பன்
                 இந்த நான்கும் வெறும் பெயர்கள் மட்டுமல்ல; வர்க்க
                அடுக்குகள் ஜாதி -பொருளாதாரம் - வாழ்நிலை - மனநிலை
                போன்றவற்றை மங்கலாக காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம்
                இந்தப்பெயர்கள்.

கேள்வி உங்கள் மகன்களை என்ன சொல்லி வளர்த்திருக்கிறீர்கள்?
பதில்:     போராடுங்கள்!
                செருப்பு தைத்தாலும் செயற்கைகொள் செய்தாலும் அதில்
                முதலிடத்தில் இருங்கள்!
                 எந்தப் போர்க்களத்திலும் உங்கள் முதல் ஆயுதம் சத்தியமாக
                 இருக்கட்டும். சத்தியம் உங்கள் பகைவரின் வலிமை
                 பாதியாகி விடும்.
                 உங்கள் வெற்றி தனிமனித வெற்றியாக குறுகி விடாமல்
                 சமூக வெற்றியாக நீளட்டும்.
                 எந்த வெற்றியும் மனித நேயத்தில் நீளட்டும்.

பதிவின்  நீளம் கருதி இதோடு முடித்து கொள்கிறேன்.
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமிது.

வெளியீடு : சூர்யா பதிப்பகம்
விலை : ரூ.150
பக்கங்கள்- 308


நன்றிகளுடன் ,
ஜி. ராஜ்மோகன்

Friday, December 10, 2010

செட்டிநாடு - நகரத்தார்கள் கதையும் வாழ்வும்நகரத்தார்கள் என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள்
என்றும் அழைக்கப்படும் இவர்கள் இன்று உலகெங்கிலும்
வியாபித்து இருக்கிறார்கள். சோழ நாட்டின்
காவேரிபூம்பட்டினமே இவர்களது பூர்வீகம் ஆகும். ஒரு
காலத்தில் சோழர்கள் நகரத்தார் பெண்கள் மீது ஆசை கொண்டார்கள்.
இதனால் சோழர்களை வெறுத்து பாண்டிய மன்னர்களிடம்
நகரத்தார்கள்  தஞ்சம் அடைந்தார்கள்.ஒரு இடத்தில்
மற்றோர் இடத்திற்கு நகர்ந்து வந்ததால் "நகரத்தார்"
என்று பெயர் வந்ததாக சொல்வார்கள்.பாண்டிய மன்னர்கள்
கொடுத்த காரைக்குடியை சுற்றி உள்ளகிராமங்களில்
குடியேறினார்கள்.இப்பகுதியே "செட்டிநாடு" என்று
அழைக்கப்படுகிறது.இளையாத்தன்குடி
மாத்தூர் ,நேமம்,பிள்ளையார்பட்டி,இலுப்பைக்குடி
வேலங்குடி , இரணிகோயில்,வைரவன்கோயில் ,சூரக்குடி
 ஆகிய  இந்த 9 கிராமங்களிலும் 9 சிவன் கோயிலை
கட்டினார்கள்.இந்த 9 கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள்
 நகரத்தார்களுக்குள்ஏற்படுத்தப்பட்டன .இக்கோயிற்களுள் சிலவற்றில் 
உட்பிரிவுகள் உண்டுஒரே பிரிவில்  இருப்பவர்கள் பங்காளிகள் என்று
அழைக்கப்பட்டனர் . இவர்கள் ஒரே பிரிவுக்குள் திருமணம் செய்து
கொள்வதில்லை.

முன்பு இந்தகோயிலையும் சுற்றியுள்ள 96 கிராமங்களில் இவர்கள்
வசித்து வந்தனர். தற்போது இந்த கிராமங்கள் 74 ஆக குறைந்து விட்டன.
இந்த 74 கிராமங்களும் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய
மாவட்டகளில் பரவிஉள்ளது.
ஆரம்பகாலங்களில் வட்டி தொழிலை பிரதானமாக செய்து வந்த
இவர்கள் பின்னாளில் அனைத்து தொழில்களிலும் ஈடுபட
 துவங்கினார்கள்.இன்று சினிமா, கல்வி,விமான சேவை ,நிதி ,
நூற்பாலைகள், உரம் ,சிமெண்ட்பதிப்பகம் ,என்று அனைத்து
தொழிலிலும் கோலோச்சி கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஆரம்ப காலங்களில் பர்மா, மலேசிய ,சிங்கப்பூர்
ஆகிய நாடுகளில் தொழில் செய்து வந்தார்கள் .இதற்கு சான்று 
உலகம் முழுதும் இருக்கும் முருகன் கோயில்களே.
முருகன் மீது தீவிர ஈடுபாடுகொண்டவர்கள் நகரத்தார்கள் .
இவர்கள் வணிகத்தில் மட்டுமில்லாது ஆன்மிகத்திலும்
தங்கள் கொடியை உலகெங்கும் நாட்டிஉள்ளார்கள் .
ஆண்டு தோறும் விரதம் இருந்து பழனிக்கு காவடி எடுத்து 
செல்வார்கள்.இதில் சிறப்பு என்னவென்றால் மலையில் 
இருந்து திரும்பி வரும்போதும் காவடியை நடந்தே 
தூக்கி வருவார்கள்.

ஆயிரம் ஜன்னல் வீடு - காரைக்குடி 

கட்டிட கலைக்கு பெயர்பெற்றது  செட்டிநாட்டு கட்டிடங்கள் ஆகும்.
அந்த காலத்தில் கட்டப்பட்ட செட்டிநாட்டு வீடுகள் இன்று
பாரம்பரிய சின்னங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு வீடும்

அரண்மனை மாதிரி காட்சி அளிக்கும். வீட்டின் நீளம் ஒரு தெருவில்


செட்டிநாட்டு கட்டிட கலை
ஆரம்பித்து மறு தெருவில் தான் முடியும். தமிழ்நாடு அரசு
செட்டிநாட்டை சுற்றுலா தளமாக அறிவுத்துள்ளது. உலகெங்கிலுமிருந்து
ஏராளமான சுற்றுலா பயணிகள் செட்டிநாட்டு கட்டிட கலையை
பார்ப்பதற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

பல வெளிநாட்டு மாணவர்கள்
காரைக்குடியிலேயே தங்கி இவ்வீடுகளை பற்றி ஆராய்ச்சி செய்தும்
வருகிறார்கள். மழை நீர் சேகரிப்பை பற்றி நாம் இன்று தான் பேசி
கொண்டிருக்கிறோம்.ஆனால் நகரத்தார்கள் அன்றைய காலத்திலேயே
மழை நீரை சேகரிக்கும் வகையிலேயே வீடுகளை வடிவமைத்து
இருக்கிறார்கள். மழை நீரை சேகரித்து பயன்படுத்தியும்
வந்திருக்கிறார்கள்.செட்டிநாட்டு வீடுகளை சுற்றிப்பார்ப்பதற்க்கே
 ஒரு நாள் வேண்டும் .இன்றுள்ள ஆர்கிடெக்டுகளே ஆச்சர்யப்படும்
அளவிற்கு செட்டிநாட்டு கட்டிடக்கலை அமைந்துள்ளது.
காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் திருடன் ஒருவன்
வீட்டுகாரர்களுக்கு தெரியாமலேயே மூன்று
மாதம் வீட்டின் ஒரு பகுதியில் சமைத்து சாப்பிட்டு வந்தானாம்.
அப்படியென்றால் எவ்வளவு பெரிய வீடுகளாக இருக்கும் என்று 
எண்ணிப்பாருங்கள் .


செட்டிநாட்டு வீடுகள் சினிமா துறையினரையும் 
விட்டு வைக்கவில்லை. இந்த வீடுகளால் ஈர்க்கப்பட்டு நிறைய 
சினிமா படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகிறது . இது வரை 
தமிழ், மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட
நூற்றி இருபதிற்கும் மேற்ப்பட்ட சினிமா படப்பிடிப்புகள் இங்கு
நடந்துள்ளன. ஏராளமான விளம்பர படப்பிடிப்புகளும் நடந்துள்ளன.
இயக்குனர் ஹரியின் ஆஸ்தான படப்பிடிப்பு நகரமாக காரைக்குடி
விளங்குகிறது.
செட்டிநாட்டு வீடுகள் வெயிலுக்கும் மழைக்கும் ஏற்றவாறு
கட்டப்படிருக்கும். வீட்டினுள் எப்போதும் ஒரு குளுமை
இருக்கும். சுவர்களில் சிமிண்டுடன் முட்டை கலந்து பூசப்பட்டிருக்கும்.
இதனால் சுவர்கள் மிக வழவழப்பாக இருக்கும் . எனது நண்பர் ஒருவர் 
வீட்டில் எலெக்ட்ரிகல் வேலை மராமத்து பணி பார்ப்பதற்கே 
ஆறு லட்ச ரூபாய் செலவாகியதாம் . அப்படியென்றால் வீட்டின் 
மதிப்பை பார்த்து கொள்ளுங்கள்.இவர்கள் பெரும்பாலும் தங்கள் 
வீட்டின் பழமை மாறாமல் பார்த்து கொள்கிறார்கள் .செட்டிநாட்டு
திருமணங்கள் பெரும்பாலும் அவர்கள் வீட்டிலேயே தான்
நடைபெறும். கல்யாண மண்டபங்களில் திருமணம் நடப்பதை
கௌரவ விசயமாக நகரத்தார்கள் பார்க்கிறார்கள்.


செட்டிநாட்டு உணவுமுறைகள்
செட்டிநாட்டு உணவுமுறைகள் உலகப்புகழ் பெற்றது என்பது
அனைவரும் அறிந்த ஒன்றே. இன்று உலகின் எந்த பகுதிக்கு
சென்றாலும் காரைக்குடி செட்டிநாடு ரெஸ்டாரன்ட்களை
பார்க்க முடியும். அந்த அளவிற்கு செட்டிநாட்டு உணவு
வகைகள் புகழ்பெற்றவை.நகரத்தார்கள் பெரும்பாலும்
சிற்றுண்டியை பலகாரம் என்றே அழைப்பார்கள் .
யார் வீட்டுக்கு வந்தாலும் காலபலகாரம் (காலை சிற்றுண்டி)
ஆச்சா என்று கேட்பார்கள். அதே போல் மாலை 4 மணியளவில்
சாப்பிடுவதை இடைப்பலகாரம் என்று சொல்வார்கள் .
 இவர்களின் திருமணங்களில் சாப்பாடு விஷயம் என்பது
மிக முக்கியமான ஒன்று. திருமணங்களில் சைவ உணவே
பரிமாறப்படும். ஆனால்  பரிமாறப்படும் உணவு வகைகள்
கணக்கற்றவை .மதிய விருந்துக்கு தலைவாழை
 (முழு வாழைஇலை )இலை போட்டு 18 வகையான
காய்கறிகளுடன் விருந்து வைப்பார்கள் .அதே போல்
சிற்றுண்டியிலும் வகை வகையாக
வைத்து அசத்தி விடுவார்கள்.  கவுணி அரிசி, உக்காரை
வெள்ளை பணியாரம் , பால் பணியாரம்
இட்லி இல்லாமல் சிற்றுண்டி இருக்காது.
இன்றும் செட்டிநாட்டில் தயாரிக்கப்படும்
சீப்பு சீடை, தேன்குழல்,மணகோலம்,உருண்ட சீடை
அதிரசம் போன்ற வகைகள் உலகின் பல
நாட்டிற்கு ஏற்றுமதி ஆகிறது .

செட்டிநாட்டு திருமணங்கள்
நகரத்தார்களுக்கு  திருமணம் என்பது ஒரு திருவிழா மாதிரி.
 செட்டிநாட்டு திருமணத்தில்  ஏகப்பட்ட சடங்குகள் உள்ளன.
திருமணத்திற்கு முன்பு பெண்பார்த்தல்,பேசிமுடித்துக்கொடுத்தல்,
மூகூர்த்த கால் ஊண்டுதல் ,வீட்டுபடைப்பு போன்ற சடங்குகள் நடைபெறும் .திருமணத்தன்று மாப்பிள்ளை அழைப்பு,பெண் இடுக்கிகட்டுதல்,திருப்பூட்டுதல் ,மாமியார் சடங்கு , பூமணம் சொரிதல் ,மஞ்சள் நீராட்டுதல் ,சாமான் பரப்புதல் 
கும்பிட்டு கட்டிகொடுத்தல்,மணப்பெண் சொல்லி கொள்ளுதல் ,
பெண் அழைப்பு போன்ற சடங்குகள் நடைபெறும். மாப்பிள்ளைக்கு
கொடுக்கும் சீர்வரிசைகளை வீட்டின் ஒரு பகுதியில் திருமணத்திற்கு
வருவோர் பார்ப்பதற்காக மிக அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள்.
பெண் வீட்டார் மணமகனுக்கு கொடுக்கும் வரதட்சனையை ஒரு
நகை இரண்டு நகை என்றே கூறுவார்கள். இயக்குனர்
 கரு. பழனியப்பன் "பிரிவோம் சிந்திப்போம்" படத்தில்
செட்டிநாட்டு திருமணமுறைகளை அழகாக காட்டி இருப்பார்.


 மிக பிரபலமான  செட்டிநாட்டு ஆளுமைகள்
A .V . மெய்யப்ப செட்டியார் ( AVM நிறுவனர்)
கவியரசு கண்ணதாசன்
ராஜாசர் முத்தையா செட்டியார் (இந்தியன் வங்கி நிறுவனர்)
ராஜாசர் அண்ணாமலை செட்டியார்(சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக நிறுவனர்)
MAM .ராமசாமி செட்டியார்( செட்டிநாட்டு அரசர், )
RM .அழகப்பா செட்டியார் (அழகப்பா பல்கலைகழக நிறுவனர்)
.சிதம்பரம் (மத்திய உள்துறை அமைச்சர் )
AR .லக்ஷ்மணன் ( உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி)
AC .முத்தையா ( ஸ்பிக் அதிபர்,முன்னாள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தலைவர் ) 
தமிழ்வாணன் ( எழுத்தாளர் , மணிமேகலை பிரசுர நிறுவனர்)
வானதி திருநாவுக்கரசு ( வானதி பதிப்பக நிறுவனர்)
எஸ்..பி. அண்ணாமலை ( குமுதம் நிறுவனர்)
லேனா தமிழ்வாணன் ( எழுத்தாளர்)
வசந்த் ( திரைப்பட இயக்குனர்)
சோம.வள்ளியப்பன் ( நிதி ஆலோசகர் )
ராம. நாராயணன் (இயக்குனர் ,முன்னால் சட்டமன்ற உறுப்பினர்)
SP .முத்துராமன்  ( திரைப்பட இயக்குனர்)
பஞ்சுஅருணாசலம் (திரைப்பட தயாரிப்பாளர்)
கரு .பழனியப்பன் ( திரைப்பட இயக்குனர்)
சுப. வீரபாண்டியன் (எழுத்தாளர் ,SP . முத்துராமன் அவர்களின் சகோதரர்)
பழ.கருப்பையா (அரசியல்வாதி , நடிகர் )
அழ .வள்ளியப்பா (குழந்தை கவிஞர்)
தியாகராஜா செட்டியார் (நிறுவனர் தியாகராஜா கல்லூரி &மில்ஸ், மதுரை )
 .கே .செட்டியார் (சினிமா இயக்குனர்
M .தியாகராஜன் ( Paramount airways ,MD)
VN. சிதம்பரம்  (கமலா தியேட்டர் அதிபர் )
அபிராமி ராமநாதன் ( அபிராமி மெகா மால் அதிபர்)

இந்தியன் வங்கி ,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,பேங்க் ஆப் மதுரா போன்ற
வங்கிகள் காரைக்குடியில் ஆரம்பிக்க பட்ட வங்கிகள் ஆகும். இந்தியன்
வங்கியும் IOB யும்  தேசியமயமாக்க பட்டுவிட்டன. பேங்க் ஆப் மதுரா
வங்கியை ICICI வங்கி வாங்கி விட்டது.
இந்தப்பதிவில் ஏதேனும் தவறுகள் இருந்தால் தெரிவிக்கவும். தவறு
இருப்பின் மன்னிக்கவும்.


நன்றிகளுடன்
ஜி.ராஜ்மோகன்