மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Wednesday, December 15, 2010

படித்ததில் பிடித்தது- கவிப்பேரரசு வைரமுத்துவின் "பாற்கடல்" - கேள்வி-பதில் தொகுப்பு புத்தகம்

குமுதம் வார இதழில் வெளிவந்த கவிப்பேரரசு வைரமுத்து
அவர்களின் கேள்வி -பதில்களின் தொகுப்பே இந்த "பாற்கடல்"
புத்தகம். நம்மில் பலபேர் குமுதம் இதழில் இதை
வாசித்திருக்க கூடும். ஆனாலும் புத்தக வடிவில் மீள்வாசிப்பு
செய்யும் போது இன்னும் ஆழ்ந்து படிக்க முடிகிறது. .மொத்தம் 378 வாசகர்
கேள்விகளுக்கு வைரமுத்து அவர்கள் அளித்துள்ள பதில்கள்
இந்தபுத்தகத்தில் உள்ளன.   பதில்கள் ஒவ்வொன்றும் அருமை.
 சினிமா ,கலை, இலக்கியம், பொதுஅறிவு, வரலாறு, அரசியல்,
கவிதை,மொழியியல்,அறிவியல்  என்று பலதரப்பட்ட கேள்விகளுக்கு
அவர் அளித்திருக்கும் பதில் சிந்தனையை தூண்டக்கூடியவை.
இது ஒரு கேள்வி- பதில் தொகுப்பாக மட்டுமல்லாமல்
ஒரு கலைகளஞ்சியமாகவே இருக்கிறது. விளக்குமாறு
செய்வது எப்படி? என்ற கேள்வி முதல் எரிமலைகள் ஏன்
வெடிக்கின்றன? என்ற கேள்வி வரை அவரது பதில்கள்
மிக சுவாரஸ்யமாகவும் பல தகவல்களை நமக்கு தரும்
விதமாகவும் அமைந்துள்ளது.கண்டிப்பாக நாம்
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமிது.

வைரமுத்து அவர்களின் முன்னுரையில் இருந்து சில
வரிகள் :
கேள்விகள் சாவிகள்; பூமியின் புதிர்களை வாழ்வின்
ரகசியங்களை அவை திறக்கின்றன.
கேட்கப்பட்ட கேள்விகளால் தன்னைதிறந்து கொண்ட
பிரபஞ்சம் கேட்கப்படாத கேள்விகளுக்காக ஆயிரம் கோடி
ஆண்டுகளாய் அகலிகைக்கல்லாய்க் கிடக்கிறது அப்படியே.
ஆதியில் கேள்வியில்லை; அச்சமே இருந்தது; பசியே
இருந்தது; ஓட்டமும் தப்பிதலுமே இருந்தது;
ஏன் அச்சப்படுகிறோம் என்பதுதான் மனிதகுலத்தின்
முதல் கேள்வி என்கிறது மானுடவியல் .
ஒரு காலத்தில் வழியும் ரத்தம் உறையாமலே வழிவழியாக
இறந்து கொண்டிருந்தார்கள் எகிப்திய அரசர்கள் .
ஏன் இந்த மரண சம்பவம் என்ற கேள்விக்கான விடையில்
உறவுமுறைகளே மாறின .அதுவரைக்கும் எகிப்திய அரசர்கள் தங்கள் சகோதரிகளையும் எகிப்திய அரசிகள் தங்கள் சகோதரரர்களையுமே மணந்து
வந்தார்கள். எகிப்திய அழகி கிளியோபாட்ராவின் முதல் கணவன்
ராமேஷாய் என்பவன் அவள் உடன் பிறந்த அண்ணன்.
ரத்தசம்பந்தமுள்ள தாம்பத்திய உறவுகளின் காரணமாகத்தான்
உடற்கேடுகள் உண்டாகின்றன என்று கண்டறியப்பட்ட போது
சகோதர திருமணங்கள் முடிவுக்கு வந்தன.

இப்புத்தகத்தில் நான் படித்து ரசித்த சில கேள்வி பதில்கள்.

கேள்வி : கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள்?
பதில்:       மேக்- அப்பை கலைத்து விட்டு வாருங்கள்
                  டீ சாப்பிட்டு விட்டு வரலாம் என்பேன்.

கேள்வி:  துபாய் தமிழ்ச்சங்கத்தில் பேசும் போது நன்கு பந்துகளை
                 சொல்லி வாழ்க்கை தத்துவம் சொன்னீர்களே அது பற்றி?
பதில் :   " ஒவ்வொரு மனிதனும் நான்கு வகை பந்துகளோடு
                 பயணமாகிறான் .
                 வலக்கரத்தில் ஒரு பந்து ;இடக்கரத்தில் ஒரு பந்து
                 வலகக்கத்தில் ஒரு பந்து;  இடக்கக்கத்தில் ஒரு பந்து ;
                 ஒரு பந்துக்கு பெயர் தொழில் ;இன்னொரு பந்துக்கு பெயர்
                 குடும்பம் ;வேறொரு பந்துக்கு பெயர் நட்பு;
                 மற்றொரு பந்துக்கு பெயர் உடல்நலம் ;
                 இந்த நான்கு பந்துகளும் விழுந்து விடாமல் கடைசி வரை
                 கரை சேர்பவனே கடமை வீரன் .
                 நான்கு பந்துகளில் ஒன்று தான் ரப்பர் பந்து.
                அது தொழில் எனும் பந்து கீழே விழுந்தாலும் உடையாது ;
                கைக்கு திரும்பிவிடும் .
                 மற்ற மூன்று பந்துகளும் கண்ணாடி பந்துகள் கீழே
                 விழுந்தால் உடைந்து விடும்.

கேள்வி : காலையில் எழுந்ததும் என் கண்ணில் படுமாறு ஒரு வாசகம்
                  சொல்லுங்களேன் ...
பதில் :    "நின்ற இடத்தில நிற்க வேண்டுமா ?
                ஓடிக்கொண்டே இரு "

கேள்வி : வாழ்க்கை என்பது ....?
 பதில் :  கல்யாணத்திற்கும் இழவிற்கும் ஆள் சேர்க்கும் போராட்டம் .

கேள்வி : யார்  ஞானி ?
 பதில்  :   நான்மறையை கற்றவன் அல்லன் ஞானி
                " நான்" மறையக் கற்றவனே ஞானி.

கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?
பதில் :    சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்
                 சோறு
                 அரிசி
                 விதைநெல் என்பதை போல
                 சோறு - இன்றையத்தேவை
                 அரிசி - நாளையத்தேவை
                 விதைநெல் - எதிர்காலத்தேவை

கேள்வி :வாழ்க்கை எங்கே இருக்கிறது?
பதில்:      இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட
                 வேண்டும் உணவை;
                 இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட
                 வேண்டும் கலவியை;
                 இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட
                 வேண்டும் பணத்தை.
                 இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட
                 வேண்டும் மூச்சை.
                 இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும்
                 இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது
                 பாவப்பட்ட மனித வாழ்க்கை.

கேள்வி:  ஒரு பெயரைக்கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை
                 கண்டுபிடிக்க முடியுமா?
பதில் :    எதிர்காலம் தெரியுமோ இல்லையோ.... சில பெயர்களை
                 கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும்
                 குப்புஸ்வாமி
                 குப்புசாமி
                 குப்பு
                 குப்பன்
                 இந்த நான்கும் வெறும் பெயர்கள் மட்டுமல்ல; வர்க்க
                அடுக்குகள் ஜாதி -பொருளாதாரம் - வாழ்நிலை - மனநிலை
                போன்றவற்றை மங்கலாக காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம்
                இந்தப்பெயர்கள்.

கேள்வி உங்கள் மகன்களை என்ன சொல்லி வளர்த்திருக்கிறீர்கள்?
பதில்:     போராடுங்கள்!
                செருப்பு தைத்தாலும் செயற்கைகொள் செய்தாலும் அதில்
                முதலிடத்தில் இருங்கள்!
                 எந்தப் போர்க்களத்திலும் உங்கள் முதல் ஆயுதம் சத்தியமாக
                 இருக்கட்டும். சத்தியம் உங்கள் பகைவரின் வலிமை
                 பாதியாகி விடும்.
                 உங்கள் வெற்றி தனிமனித வெற்றியாக குறுகி விடாமல்
                 சமூக வெற்றியாக நீளட்டும்.
                 எந்த வெற்றியும் மனித நேயத்தில் நீளட்டும்.

பதிவின்  நீளம் கருதி இதோடு முடித்து கொள்கிறேன்.
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமிது.

வெளியீடு : சூர்யா பதிப்பகம்
விலை : ரூ.150
பக்கங்கள்- 308


நன்றிகளுடன் ,
ஜி. ராஜ்மோகன்

2 comments:

Ganesan said...

பகிர்விற்கு நன்றி

ஜி.ராஜ்மோகன் said...

வந்தமைக்கு நன்றி