மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்


நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்!
































Sunday, November 14, 2010

"மைனா" - யதார்த்த சினிமாவின் மற்றொரு மைல்கல்!


தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் மைனா திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு புதிய முயற்சி என்றே சொல்லலாம் . நூறு கோடி இருநூறு கோடி கொட்டி எடுக்கும் படங்களை விட இந்த மாதிரி சிறிய படங்கள் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியவை.மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து இல்லாமல் பிரமாண்ட செட்கள் இல்லாமல் வெளிநாட்டில் பாடல்கள் எடுக்காமல் தன்னுடைய கதை சொல்லும் திறமையை வைத்து மட்டும் களம் இறங்கியிருக்கும் இயக்குனர் பிரபு சாலமனுக்கு ஒரு ராயல் சல்யுட். இவருக்கு மைனா ஆறாவது படம். ஏற்கனவே இவர் இயக்கி இருந்த கண்ணோடு காண்பதெல்லாம் ,கிங் ,கொக்கி ,லீ, லாடம் முதலிய படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. மைனா படத்தின் கதை என்னவோ மிக இயல்பானதுதான் ஆனால் கதையை நகர்த்தியிருக்கும் விதம் மிக அருமை.படத்தின் நாயகன் சுருளி சிறுவயதில் இருந்து நாயகி மைனாவிற்கும் அவரது அம்மாவிற்கும் ஒரு பாட்டி வீட்டில் அடைக்கலம் தருகிறார்.மைனாவின் அம்மாவும் மருமகனே என்றே சுருளியை அழைக்கிறார். மைனாவை தினசரி பள்ளிகூடத்திற்கு சைக்கிள் மூலம் அழைத்து செல்வதே அவரது பிரதான வேலை.இந்த நிலையில் மைனா பூப்பைடைகிறார். சுருளிக்கும் மைனா மேல் காதல் பூக்கிறது.மைனாவின் அம்மாவோ வேறொரு இடத்தில் மாப்பிள்ளைப்பார்க்கிறார் . இது தெரிய வர சுருளி மைனாவின் அம்மா மேல் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ய முயல்கிறார். போலீஸ் அவரை கைது செய்து 15 நாள் காவலில் பெரியகுளம் கிளைச்சிறையில்அடைக்கிறார்கள். இதற்கிடையில் மைனாவின் அம்மா தீபாவளி அன்று மைனாவிற்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.இது ஜெயிலில் இருக்கும் சுருளிக்கு தெரிய வர ஜெயிலில் இருந்து தப்பி விடுகிறார்.சுருளியை
தேடி இன்ஸ்பெக்டர் பாஸ்கரும் ,ராமையாவும் அவனது மலை கிராமமான செவ்வங்குடிக்கு செல்கின்றனர் . அங்கு மைனாவின் திருமணம் தடை படுகிறது,போலீசார் சுருளியை பிடித்துவிடுகின்றனர் . இவர்களோடு மைனாவும் வந்து விடுகிறார் .இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ,ராமையா ,சுருளி,மைனா நால்வரும் பெரியகுளம் நோக்கி பயணம் செய்கிறார்கள். இந்தப்பயணம் தான் படத்தின் மீதிக்கதை . அவர்கள் எப்படி பெரியகுளம் வந்து சேர்கிறார்கள் அதன்பின் என்ன நடக்கிறது என்பதில் தான் படமே இருக்கிறது .இந்த மாதிரி ஒரு படம் எடுப்பதற்கு முதலில் நிறைய துணிச்சல் வேண்டும் .அது இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கு நிறையவே இருக்கிறது. இந்தப்படத்தின் மிகப்பெரிய பலமே அதன் casting என்று சொல்லப்படுகின்ற பாத்திர அமைப்புகள் தான். ஹீரோ முதல் துணை நடிகர்கள் வரை
இயக்குனர் தேர்ந்து எடுத்திருக்கும் நடிகர்கள் தான் படத்தை தூக்கி நிறுத்திஇருக்கிறார்கள் . ஹீரோ விதார்த் சுருளி பாத்திரமாகவே மாறிவிட்டார். ஆனாலும் பருத்திவீரனின் பாதிப்பு நிறைவே தெரிகிறது.பரட்டை தலை ,மடிச்சு கட்டிய லுங்கி ,தாடியோடு பருத்திவீரன் கார்த்தியை நினைவு படுத்துகிறார் . மைனாவாக அமலா பால் கச்திதமாக பொருந்தி இருக்கிறார் . அவரது பெரிய விழிகள் தான் அவரது பிளஸ். கன்னத்தில் இருக்கும் சின்ன சின்ன பருக்கள் கூட அழகாக இருக்கின்றன .அவருக்கு படத்தில் வசனங்கள் மிகக்குறைவு.பார்வையாலேயே பேசுகிறார் .இன்ஸ்பெக்டர் பாஸ்கராக வரும் அறிமுகம் சேதுவிற்கு முதல் படம் போலவே தெரியவில்லை.படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவர் காட்டும் இறுக்கமான முகபாவம் ,உயிரை காப்பாற்றியதற்காக சுருளிக்கு நன்றி சொல்லும் இடம் நச். தம்பி ராமையா படத்தின் காமெடிக்கு உதவி செய்கிறார். படத்தின் இறுதியில் நல்ல குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மைனாவின் அம்மாவாக
வரும் பூவிதா,சுருளியின் அப்பாவாக வரும் பிணம்தின்னி,பாஸ்கரின் மனைவியாக வருபவர் , அந்த சிறுவன் மற்றும் பேருந்து பயணத்தில் வரும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மற்றும் சில சின்னச்சின்ன கேரக்டர்களும் படத்திற்கு உதவிஇருக்கிறார்கள். இந்த படத்தின் மற்றொரு கேரக்டராக வருவது அதன் லொக்கேசன். இதுவரை யாரும் படம்பிடிக்காத போடியை சுற்றியுள்ள மலைகிராமங்கள் குரங்கணி ,செவ்வன்குடி ,மூணாறு பகுதிகளின் பச்சை பசேல் என்ற காட்சிகளை திரையில் பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு இது முதல் படமாம் ,பட்டையை கிளப்பி இருக்கிறார். எந்த வித லைட்டிங்கும் இல்லாமல் இயற்கை வெளிச்சத்திலேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். இசை Dஇமான் பின்னணி இசையும் அனைத்துப்பாடல்களும் மிக அருமை குறிப்பாக 'மைனா மைனா', 'ஜிங்க்சிக்கா' 'கையப்புடி'பாடல்கள் சூப்பர். வைரபாலனின் கலை ,LVK .தாஸின் எடிட்டிங் படத்திற்கு பலம். இந்த மாதரியான படத்தை கொடுத்ததற்கு இயக்குனர் பிரபு சாலமனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சமீப காலத்தில் வந்த படங்களில் இந்த மாதிரி காட்சிக்கு காட்சி கைதட்டல்கள் வாங்கிய படம் இதுவாகத்தான் இருக்க முடியும். குறிப்பாக கடைசி காட்சியில் தியேட்டரே எழுந்து நின்று கை தட்டுகிறது."மைனா" கண்டிப்பாக தமிழ் சினிமாவில் தலை சிறந்த கிளாசிக் படங்கள் வரிசையில் இடம் பிடிப்பதில் சந்தேகம் இல்லை . மைனா கண்டிப்பாக உயரப்பறக்கும் .

No comments: